நான் வேலை கேட்டு விண்ணப்பித்திருந்தால் தற்போது இருக்கும் இடத்தில் அவர் இருந்திருக்க மாட்டார் என மத்திய நிதியமைச்சரின் கருத்துக்கு, பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா பதிலடி கொடுத்துள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் எழுதிய கட்டுரையில், பிரதமர் மோடியும் அவரது நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் சேர்ந்து இந்தியப் பொருளாதாரத்தையே சிதைத்து விட்டார்கள் என முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த பாஜகவின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா கூறியிருந்தார்.
அதில், இந்த பொருளாதார சரிவு திடீரென்று ஏற்பட்டதல்ல. ஒரே நாளில் உருவானதும் அல்ல. பல ஆண்டுகளாக இதற்கான காரணங்கள் சேர்ந்து கொண்டே இருந்தன. இதை சரியாக கண்டறிந்து தேவையான மாற்று நடவடிக்கைகளை எடுத்திருந்தால் இதை தவிர்த்திருக்கலாம். இப்படிப்பட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு சரியான புரிதல், முழுநேர கவனம், சரி செய்வதற்கான உறுதியான நடவடிக்கைகள் ஆகியவை தேவைப்படுகிறது. ஆனால் பல்வேறு பொறுப்புகளை ஒரே நேரத்தில் சமாளித்துக் கொண்டிருக்கும் ஒரு நபரிடம் இதை எதிர்ப்பார்ப்பது அதிகப்படியானதுதான்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு வாஜ்பாய் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த பாஜகவின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்
ஒவ்வொரு காலாண்டிலும் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வளர்ச்சி விகிதம் கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத வகையில் 5.7 சதவிகிதத்தை சந்தித்துள்ளது. மற்றொரு முக்கியமான விஷயத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஜிடிபி வளர்ச்சியை நிர்ணயிக்கும் முறையை 2015ம் ஆண்டில் அரசு மாற்றியுள்ளது. ஏற்கனவே கடைபிடிக்கப்பட்டு வந்த முறையை கைவிட்டு புதிய முறையை கையாண்டதால் வளர்ச்சி விகிதத்தை அது 200 அடிப்படை புள்ளிகள் அதிகமாக காட்டுகிறது. பழைய முறையில் அளவிட்டால், பொருளாதார வளர்ச்சி விகிதம் உண்மையாக 3.7 சதவிகிதம் மட்டுமே. இது மேலும் குறைவாகக் கூட இருக்கலாம். பொருளாதாரத்தை கட்டி உருவாக்குவதை விட, அழிப்பது எளிதானது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, அவரது கருத்துக்கு ஆதரவுகளும், எதிர்ப்புகளும் குவிந்த வண்ணம் உள்ளன. நாடு முழுவதும் இது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்து வருகிறது. அதிகாரத்துக்கு எதிராக யஷ்வந்த் சின்ஹா உண்மையை பேசியதில் மகிழ்ச்சி என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, யஷ்வந்த் சின்ஹாவின் கருத்தை விமர்சித்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, யஷ்வந்த் சின்ஹாவுக்கு முன்னாள் மத்திய நிதி அமைச்சராக இருப்பது சவுகரியமாக இல்லை என தெரிகிறது. இப்படி குற்றச்சாட்டு சொல்வதன் மூலம், அவர் 80 வயதில் வேலை கேட்டு விண்ணப்பிக்கிறார். அவர் நிதி அமைச்சராக இருந்தபோது 15 சதவீத வாராக்கடன் இருந்தது உள்ளிட்ட சாதனைகளை மறந்து விட்டார். கொள்கைகளை விட்டு விட்டு மனிதர்களை விமர்சிக்க தொடங்கி விட்டார். யஷ்வந்த் சின்ஹா, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்துடன் கைகோர்த்து செயல்படுகிறார். ஒருவரை ஒருவர் கடுமையான வார்த்தைகளால் திட்டிக்கொண்டதை இருவருமே மறந்து விட்டார்கள் என்றார்.
இந்நிலையில், அருண் ஜெட்லியின் கருத்துக்கு பதிலதுடி கொடுத்துள்ள யஷ்வந்த் சின்ஹா, நான் வேலை கேட்டு விண்ணப்பித்திருந்தால் தற்போது இருக்கும் இடத்தில் அவர் இருந்திருக்க மாட்டார் என தெரிவித்துள்ளார்.