டெல்லி ஐஐடி கல்வி நிறுவனத்தின் விடுதியில் பரிமாறப்பட்ட காலை உணவில் எலி இறந்து கிடந்ததாக குற்றம்சாட்டியுள்ள மாணவர்கள், விடுதியில் சுகாதாரமான உணவை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, டெல்லி ஐஐடியில் பயிலும் ஜெயந்த் தாரோகர் எனும் மாணவர், முகநூலில் தன் விடுதி பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்தார். அதில், கடந்த செவ்வாய் கிழமை கல்லூரி விடுதியில் காலை உணவை உண்டபோது அதில், தேங்காய் சட்னியில் சிறிய எலி ஒன்று இறந்து கிடந்ததாக குற்றம்சாட்டினார். மேலும், தான் அதனை பார்க்கும் முன்பே பலர் அந்த உணவை சாப்பிட்டு வீட்டதாக குறிப்பிட்ட மாணவர் ஜெயந்த், இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து பேசிய மாணவர் ஜெயந்த், கல்லூரி விடுதியில் இதுபோன்று நடப்பது இது முதல் முறை அல்ல எனவும், விடுதி உணவில் பலமுறை கரப்பான்பூச்சி, பேனா மை, தேனீ ஆகியவற்றை கண்டறிந்து நிர்வாகத்திடம் புகார் அளித்திருந்ததாகவும் கூறினார். ஆனால், இதுகுறித்து பலமுறை மாணவர்கள் புகார் அளித்தும் ஐஐடி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என மாணவர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.
ஆனால், இம்முறை உணவில் எலி இறந்துகிடந்தது குறித்து, மாணவர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஜேசன் சூரி என்ற மாணவர், தன் முகநூல் பக்கத்தில் இதுகுறித்து காட்டமான பதிவு ஒன்றை பகிர்ந்தார். அதில், ஐஐடி போன்ற தரம் வாய்ந்த கல்வி நிறுவனத்தின் விடுதி உணவில் இறந்த எலி கண்டுபிடித்திருப்பது குறித்து கடுமையாக குற்றம்சாட்டினார். மேலும், இத்தகைய உணவுகளை உண்டால் பல்வேறு வகையான வைரஸ்கள் பரவி, டெங்கு, காலரா, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் ஏற்படும் என அவர் தனது பதிவில் குறிப்பிட்டார்.
கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் உள்ள அரசு பள்ளியில் எலி இறந்துகிடந்த மதிய உணவை உண்ட மாணவர்களில் பாதிக்கப்பட்டு 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.