அயோத்யாவில் ராமருக்கு பிரம்மாண்ட சிலை அமைக்க உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் முடிவுசெய்து அதற்கான பணிகளில் அம்மாநில அரசு ஈடுபட்டிருப்பது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சர்ச்சைக்குரிய அயோத்யா ராம ஜென்ம பூமி - பாபர் மசூதி விவகாரத்தை சம்பந்தப்பட்டவர்கள் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என கடந்த மார்ச் மாதம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் கருத்து தெரிவித்திருந்தார். ஆனால், அத்தைகைய பேச்சுவார்த்தையை முன்னெடுக்க, மத்திய அரசு, உத்தரபிரதேச மாநில அரசு ஆகியவை இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், அயோத்தியில் உள்ள சராயு நதிக்கரையில் பிரம்மாண்ட ராமர் சிலை அமைக்க முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் தலைமையிலான பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான திட்ட அறிக்கை அம்மாநில ஆளுநர் ராம் நாயக்கிடம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், மத சுற்றுலா தலங்களை மேம்படுத்தும் நோக்கில் ராமர் சிலை அமைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை திங்கள் கிழமை ஆளுநர் மாளிகை வெளியிடப்பட்டது. மேலும், ராமர் சிலை குறித்த விவரங்கள் அடங்கிய காட்சித்தொகுப்பும் அன்றைய தினம் விளக்கப்பட்டது.
அதன்படி, அச்சிலை 100 மீட்டர் உயரம் கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் சில மாற்றங்கள் இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் அனுமதி கிடைத்தவுடனேயே சிலை அமைக்கப்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதற்கான, அனுமதி கடிதம் தீர்ப்பாயத்திற்கு அனுப்பப்பட உள்ளது என மாநில சுற்றுலா துறை செயலாளர் அவானிஷ் குமார் அவாஸ்தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார்.
ராமர் சிலை தவிர்த்து, ராமரின் வரலாற்றை உணர்த்தும் காட்சி மாடம், கலையரங்கம் உள்ளிட்ட பொதுமக்கள் பயன்பாட்டு கட்டடங்களும் அங்கு கட்டப்பட உள்ளன. இந்த திட்டங்களுக்காக ரூ. 195.89 கோடி மதிப்பீட்டில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய அரசுக்கு மாநில அரசு அனுப்பியுள்ளது. அதில், முதல்கட்டமாக ரூ. 133.70 கோடி மத்திய அரசு இத்திட்டங்களுக்காக வழங்கியுள்ளது.
மேலும், வரும் அக்டோபர் 18-ஆம் தேதி தீபாவளி பண்டிகையன்று அயோத்யாவில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது. அந்நிகழ்ச்சியில், முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத், ஆளுநர் ராம் நாயக், மத்திய சுற்றுலா துறை அமைச்சர் கே.ஜே.அல்ஃபோன்ஸ் ஆகியோர் தீபாவளியன்று நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளனர். இந்த நிகழ்ச்சியின்போது சர்ச்சைக்குரிய இடத்திலிருந்து வெறும் 2 கிலோமீட்டர் தூரம் தள்ளி 1.71 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட உள்ளன. மேலும், அயோத்தியாவை நோக்கிய் கலாச்சார நடை பயணம், ராமருக்கு அடையாள முடிசூட்டு விழா உள்ளிட்டவையும் தீபாவளியன்று நடத்தப்பட உள்ளன.
மேலும், அன்றைய தினம் முதலமைச்சரும், ஆளுநரும் அயோத்தியாவில் பல வளர்ச்சி திட்டங்களுக்கான அடிக்கல் நாட்ட உள்ளனர். சராயு ஆற்றின் மலைத்தொடருக்கு தீபாராதனை காட்டும் நிகழ்ச்சி, இந்தோனேஷியா, தாய்லாந்து நாடுகளிலிருந்து வரும் கலைஞர்களின் கலை நிகழ்ச்சியும் அன்றைய தினம் நடத்தப்பட உள்ளன.