ஆந்திராவில், ரக்ஷா பந்தன் தினத்தன்று இறந்த தனது சகோதரனுக்கு, சகோதரி ஒருவரது ராக்கி கட்டிய சம்பவம் அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
ஆந்திர மாநிலம் திருவூரு பகுதியை சேர்ந்தவர் கிரிபாபு என்பவரது மகன் வினோத் (வயது 22). டிப்ளமோ பட்டதாரியான இவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நண்பர்கள் தினத்தைக் கொண்டாட தன் நண்பர் ஹிமாகிரன் என்பவருடன் காரில் பெத்தபல்லி ஏரிக்கு சென்றார். அப்போது, அவர்கள் பயணித்த கார் பெத்தபல்லி ஏரியில் எதிர்பாராத விதமாக சரிந்து மூழ்கியது. இவர்களின் அலறல் சத்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் அங்கு வந்தனர். இதில், ஹிமாகிரன் மற்றவர்களின் உதவியுடன் உயிர்பிழைத்தார். ஆனால், வினோத் மற்றவர்களின் உதவியாலும் மீள முடியாமல்போகவே நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதையடுத்து, தகவலறிந்த காவல் துறையினர் 12 மணிநேரம் போராடி திங்கள் கிழமை அவரது உடலை மீட்டனர்.
அவரது உடல் சத்துப்பள்ளி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது. அவரது மரணம் வினோத்தின் குடும்பத்தினரை வெகுவாக பாதித்தது. ரக்ஷா பந்தன் அன்று தன் அண்ணனை சடலமாக பார்த்த அவரது தங்கை சிரிஷா சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளானார். இந்நிலையில், மருத்துவமனையில் அவர் செய்த காரியம் காண்போரை கலங்கச் செய்வதாக இருந்தது. இறந்த தன் அண்ணனின் கைகளில் அவர் ராக்கி கட்டினார். இது, அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
“அடுத்த வருடம் நான் யாருக்கு ராக்கி கட்டுவேன்? நீ இல்லாமல் நான் எப்படி வாழ்வேன்”,என அப்பெண் கதறி அழுதார்.
ரக்ஷா பந்தன் தினத்தன்று, இறந்த தன் அண்ணனின் கைகளில் தங்கை ராக்கி கட்டிய இச்சம்பவம் மற்றவர்களின் மனதை கலங்கடித்தது.