உஷார்!! இந்தியாவில் காலடி வைத்த 'ஜிகா' வைரஸ்!

மூன்று விதமான ஆய்வக சோதனைக்கு பின் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதன்முறையாக அகமதாபாத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பிற்கு மூன்று பேர் ஆளாகியிருப்பதாக உலக சுகாதார மையம் (WHO) உறுதி செய்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் சோதனை செய்யப்பட்ட ஒரு கர்ப்பமான பெண்ணும் இதில் அடங்குவதாக கூறியுள்ளது. பாதிப்பிற்குள்ளாகியுள்ள இந்த மூன்று கேஸ்களும், அஹமதாபாத்தின் பாபுநகர் பகுதியில் இருந்து வந்திருப்பதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், குஜராத் மாநிலத்தின் அஹமதாபாத் மாவட்டத்தில் உள்ள பாபுநகர் பகுதியில் மூன்று பேருக்கு ஜிகா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மூன்று விதமான ஆய்வக சோதனைக்கு பின் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. குஜராத்தில் உள்ள பி.ஜே. மருத்துவக்கல்லூரியில் தான் முதன்முதலாக அவர்களுக்கு ஜிகா வைரஸ் இருப்பது RT-PCR சோதனை மூலம் கண்டறியப்பட்டது. அதன்பின், புனேவில் உள்ள ‘நேஷ்னல் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜி’-ல் மீண்டும் RT-PCR சோதனை செய்து, ஜிகா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.

அஹமதாபாத் மாநகராட்சியில் பூச்சியியல் வல்லுனராக பணியாற்றி வரும் டாக்.விஜய் கோலி பேசிய போது, “நான் சிறிது நேரத்திற்கு முன்புதான் அந்த அறிக்கையை படித்தேன். நான் சொல்வதெல்லாம் என்னவெனில், நமது கண்காணிப்பை மேம்படுத்தி, கொசுக்களை ஒழிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.

முன்னதாக, கடந்த மே 24-ஆம் தேதி அஹமதாபாத்தில் நடந்த பிரச்சாரத்தில், 2022-ல் குஜராத் மாநிலம் மலேரியாவில் இருந்து முற்றிலும் விடுபட வேண்டும் என உறுதி ஏற்கப்பட்டது. இந்நிலையில், அங்கு ஜிகா வைரஸ் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காந்திநகரில் உள்ள Indian Institute of Public Health-ல் கூடுதல் பேராசிரியராக பணிபுரியும் மருத்துவர் தீபக் பி சக்சேனா அளித்துள்ள பேட்டியில், “நாம் இப்போது விழிப்புடன் இருக்க வேண்டும். ஜிகா மற்றும் டெங்குவை ஏற்படுத்தும் வைரஸ் ஒன்றுதான். எனவே ஜிகா எளிதாக பரவும். நாம் ஆபத்தில் இருக்கிறோம். அரசின் இந்த ஒரு பிரச்சார கூட்டத்தால் மற்ற தீவிர நோய்கள் எல்லாம் மறைக்கப்படுகின்றன” என்றார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close