2017ம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் மருத்துவம், கலை, அறிவியல் என்று ஒவ்வொரு துறையிலும் சிறந்தவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகளுக்கான அறிவிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது.
முதல் நாளான இன்று மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2017 அறிவிக்கப்பட்டுள்ளது. நோபல் தேர்வுக் குழுவின் செயலாளர் தாமஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதன்படி அமெரிக்காவைச் சேர்ந்த ஜெஃப்ரி சி. ஹால், மைக்கேல் ராஸ்பாஷ், மைக்கேல் யங் ஆகிய 3 பேருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரினங்களின் 24 மணி நேர சுழற்சி (உயிர்க் கடிகாரம்) செயல்படும் முறையைக் (molecular mechanisms controlling the circadian rhythm) கண்டறிந்ததற்காக மூவரும் நோபல் பரிசுக்குத் தேர்வாகியுள்ளனர்.
பரிசுத் தொகையான ரூ. 7 கோடி இவர்கள் மூன்று பேருக்கும் பகிர்ந்தளிக்கப்படும். இதே போன்று நாளை இயற்பியலுக்கான நோபல் பரிசும், நாளை மறுதினம் வேதியியலுக்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட உள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு அக்டோபர் 6ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
அப்படி என்ன இந்த மூவரும் கண்டுபிடித்தார்கள்?
இதைப் பற்றி நாம் சுருக்கமாக புரியும்படி சொல்ல வேண்டுமெனில், மனிதனுக்கு எப்படி வேளா வேளைக்கு டான்னு பசி எடுக்கிறது?
எப்படி ஒருவருக்கு தினமும் இரவு வந்தவுடன் தூக்கம் வருகிறது? எப்படி கரெட்டாக காலையில் தூக்கம் கலைந்து எழுகிறான்? கடிகாரம் வைத்தது போல எப்படி இவையனைத்தும் சரியாக அந்தந்த நேரத்திற்கு நடக்கிறது? போன்றவற்றைத் தான் இவர்கள் ஆய்வு செய்து விளக்கியுள்ளனர்.
இந்த ஆய்வு குறித்து இவர்கள் அளித்துள்ள விளக்கத்தில், "பூமியில் வாழும் வாழ்க்கை நமது கிரகத்தின் சுழற்சியைத் தழுவியுள்ளது. பூமியில் வாழும் மனிதன் உள்ளிட்ட உயிரினங்களுக்கு உள்ளே உயிரியல் கடிகாரம் இருப்பதை நாம் கண்டறிந்துள்ளோம். இந்த கடிகாரம் மூலம் தான் மனிதனின் அனைத்து செயல்பாடுகளும், அந்தந்த நேரத்திற்கு சரியாக நடந்துக் கொண்டிருக்கிறது. ஆனால், இந்த கடிகாரம் எப்படி வேலை செய்கிறது? யார் இதை இயக்குகிறார்கள்? என்பதை ஆராயும் போது நமக்கு கிடைத்த பதில் இது தான்.
அதாவது, பூமியின் சுழற்சியைப் பொறுத்தே, மனிதன், விலங்குகள், தாவரங்களில் உள்ளிருக்கும் உயிரியல் கடிகாரம் கச்சிதமாக செயல்படுகிறது. பூமியின் சரியான சுழற்சியால் தான் நமக்கு நேரத்திற்கு பசியெடுத்து, நேரத்திற்கு தூக்கம் வருகிறது.
இதனால் தான் நாம் விமானத்தில் செல்லும் போது "jet lag" என்ற களைப்பு ஏற்படுகிறது.
அதாவது, ஒருவர் இந்தியாவில் இருக்கும் போது, அவரது உடலினுள் இருக்கும் உயிரியல் கடிகாரம் வழக்கம் போல் சீராக இயங்கிக் கொண்டிருக்கும். அதேசமயம் அவர் அமெரிக்கா செல்கிறார் என்றால், அவரது உயிரியல் கடிகாரத்தில் நிலையற்ற தன்மை சிறிது நேரத்திற்கு ஏற்படும். திடீரென ஏற்படும் கால மாற்றத்தால் கடிகாரம் குழம்பிவிடுகிறது. இதனால், தான் விமான அசதி ஏற்படுகிறது. இந்த திடீர் மாற்றத்தால், சிலரது உடல் பாதிப்புக்கு கூட ஆளாகலாம்" என்றும் அந்த மூன்று விஞ்ஞானிகளும் தங்களது ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.