ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் சிக்கி, அந்நாட்டு ராணுவ வீரர்கள் சுமார் 26 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 13 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் கந்தஹார் மாகாணம் காக்ரெஸ் மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாம் மீது தலிபான் தீவிரவாதிகள் நேற்றிரவு தாக்குதல் நடத்தியுள்ளனர். சுமார் 100-க்கும் மேற்பட்ட தீவிரவதிகள் பல்வேறு திசைகளில் இருந்து நடத்திய வெறித்தனமான தாக்குதலில் சிக்கி அந்நாட்டு ராணுவ வீரர்கள் சுமார் 26 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 13 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு ராணுவ வீரர்களும் தக்க பதிலடி கொடுத்துள்ளனர். 80-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜெனரல் தவ்லாத் வாசிரி தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் பல மணி நேரங்கள் நீடித்தது என விவரித்துள்ள அப்பகுதி மக்கள், வான்வழித் தாக்குதலும் நடதப்பட்டது என்று தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த தகவலை அதிகாரிகள் உறுதிபடுத்தவில்லை.
அதேசமயம், தாக்குதலுக்கு பொறுபேற்றுள்ள தலிபான் தீவிரவாத அமைப்பு, தாக்குதல் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
முன்னதாக, ஆப்கானிஸ்தானில் தலிபான்களை எதிர்த்து தாக்குதல் நடத்துவதற்கும், உள்நாட்டு பாதுகாப்பை மேற்கொள்வதற்கும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை இயங்கி வந்தது. பின்னர், கடந்த 2014-ஆம் ஆண்டு இறுதியில் ஆப்கான் ராணுவம் பொறுப்பேற்றதால், இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த நேட்டோ படை விலகியது.
அதனையடுத்து, ராணுவ வீரர்கள் மீதான தாக்குதல் ஆப்கன் நாட்டில் அதிகரித்து வருகிறது. கடந்த 2016-ஆம் ஆண்டில் மட்டும் ராணுவ வீரர்கள் 6,800 பேர் கொல்லப்பட்டு 36 சதவீதம் உயிரிழப்பு அதிகரித்துள்ளது என அமெரிக்க கண்காணிப்பு அமைப்பான சிகார் தெரிவித்துள்ளது.
அதேசமயம், ஐக்கிய நாடுகள் சபை அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் மனிதர்கள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான இடங்களில் கந்தஹாரும் ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லையில் கந்தஹார் அமைந்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
கடந்த வார இறுதியில் மட்டும் கிராம மக்கள் சுமார் 70 பேரை தலிபான் தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர். அதில், ஏழு பேர் சடலமாக மீட்கப்பட்டனர். 30 பேர் பத்திரமாக வீடு திரும்பியுள்ளனர். எஞ்சிய நபர்களை தேடும் பணியில் ஆப்கன் போலீசார் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.