பழம்பெரும் நடிகரும் பதம்ஸ்ரீ விருது பெற்றவருமான டாம் ஆல்டர் இன்று காலமானார். பல ஆண்டுகளாக தோல் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த அவர் மும்பையில் உள்ள தனது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 67.
அமெரிக்க வம்சாவளியை சேர்ந்த டாம் ஆல்டர் கடந்த 1976-ஆம் ஆண்டு தர்மேந்திரா நடித்த சாரஸ் எனும் பாலிவுட் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின், சத்ரஞ் கே கிலாடி, காந்தி, க்ரந்தி, போஸ்: தி அன்ஃபர்காட்டன் ஹீரோ, வீர் சாரா உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ் பெற்றவர் டாம் ஆல்டர்.
திரைப்படங்களில் மட்டுமல்லாமல், மேடை கலைஞராகவும், சின்னத்திரை நடிகராகவும் தன் முத்திரையை பதித்தவர் டாம் ஆல்டர். சக்திமான், கேப்டன் வியோம் உள்ளிட்ட குழந்தைகள் சீரியல்கள் மூலம் குழந்தைகள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.
கடந்த 2008-ஆம் ஆண்டு இவருக்கு இந்திய அரசின் மிக உயரிய விருதான பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டது.
இந்நிலையில், தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த டாம் ஆல்டர், சனிக்கிழமை காலை மும்பையில் உள்ள தனது வீட்டில் உயிரிழந்தார். இந்த செய்தியை அவருடைய மகன் ஜேமி ஆல்டர் ஊடகங்களிடம் பகிர்ந்தார்.
டாம் ஆல்டருக்கு கரோல் எவான்ஸ் ஆல்டர் என்ற மனைவியும், ஜேமி ஆல்டர் என்ற மகனும், அஃப்ஷான் என்ற மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டாம் ஆல்டர் மறைவுக்கு அவருடைய ரசிகர்களும், திரையுலகினரும் சமூக வலைத்தளங்கள் மூலம் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.