அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் சர்ச்சைக்குரிய டுவீட்கள் அச்சிடப்பட்ட "டாய்லெட் பேப்பர்"-யை ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் விற்பனை செய்து வருகிறது.
நாம் அன்றாடம் காலையில் எழுந்து காலைக் கடன்களை முடிப்பது நம் வாழ்க்கையுடன் ஒன்றிணைந்த ஒன்று. அதேபோல், தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறித்த செய்திகளும், அவரது டுவிட்டர் பக்கத்தில் இடம்பெறும் டுவீட்டுகளும் நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகி விட்டது.
சர்ச்சைகளுக்கு பெயர் போனவரான அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிவிட்ட சர்ச்சைக்குரிய டுவீட்கள் ஏராளம். அவ்வாறு சர்ச்சையை ஏற்படுத்திய சுமார் 10 டுவீட்கள் மட்டும், அடுத்தடுத்து தொடர்ந்து டாய்லெட் பேப்பர் ரோலில் அச்சிடப்பட்டு, ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானில் விற்பனைக்கு வந்துள்ளது. இதுகுறித்து அமேசானின் சில்லறை விற்பனையாளர் ஒருவர் கூறும்போது,"மற்ற டாய்லெட் பேப்பர்கள் வார்த்தைகள் இல்லாமல், வெற்றுக் காகிதமாக இருக்கும். ஆனால், இதில் சிறந்த வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன" என்று நையாண்டியாக கூறியுள்ளார்.
இதில், மற்றொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அமேசான் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்த சில மணி நேரங்களிலேயே இந்த டாய்லெட் பேப்பர்கள் முழுவதுமாக விற்றுத் தீர்ந்தன. எனினும், இந்த டாய்லெட் பேப்பர் ரோலை விரைவில் மீண்டும் ஸ்டாக் வைக்க அந்நிறுவனம் பணியாற்றி வருகிறது.
அனைத்து நாடுகளிலும் ஒரே மாதிரியான கழிவறை அமைப்பு, பயன்படுத்தும் முறை இருப்பது இல்லை. பல நாடுகள், பல வகையில் அவர்களுக்கு ஏற்ற வடிவங்களில் கழிவறை முறையை பின்பற்றி வருகின்றனர். நம்மூர் வழக்கப்படி கால் கழுவும் பழக்கத்தை பின்பற்றி வருகிறோம். மேற்கத்திய நாடுகளில் டாய்லெட் பேப்பர் உபயோகம் செய்யும் பழக்கத்தை பின்பற்றி வருகிறார்கள்.
எனவே, இந்த டாய்லெட் பேப்பர் விற்பனைக்காக அவ்வப்போது அதில் புதுவிதமான உத்திகள் கையாளப்படுவது வழக்கம். முன்னதாக, ஆஸ்திரேலியாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று தங்கத்திலான டாய்லெட் பேப்பர் ரோலை தயாரித்து விற்பனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.