ஜெர்மனி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட ஏஞ்சலா மெர்கல், நான்காவது முறையாக வெற்றி பெற்று அதிபராக தேர்வு செய்யப்படவுள்ளார்.
ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் நாடாளுமன்றம் கடந்த 1949-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. மொத்தம் 598 உறுப்பினர்கள் கொண்ட இந்த நாடாளுமன்றத்தில் ஆட்சியமைக்க 300 இடங்களில் வெற்றி பெற வேண்டும். ஜெர்மனியில் நாடாளுமன்றத் தேர்தல் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. அங்கு, கடந்த 2005-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சி ஆட்சி அமைத்தது. ஏஞ்சலா மெர்கல் அதிபராக பதவியேற்றார். தொடர்ந்து, 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்று இரண்டாவது முறையாகவும் ஏஞ்சலா அதிபராக பதவியேற்றார்.
மொத்தம் 598 உறுப்பினர்கள் கொண்ட ஜெர்மனி நாடாளுமன்றத்தில், கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சி 311 இடங்களில் வெற்றி பெற்று சமூக ஜனநாயக கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தது. ஏஞ்சலா மெர்கல் தொடர்ந்து மூன்றாவது முறை ஜெர்மன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த அரசின் பதவிக்காலம் முடிய உள்ள நிலையில், அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான 19-வது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில், தற்போதைய சான்சலரான ஏஞ்சலா மெர்கலும், சமூக ஜனநாயக கட்சி சார்பில் மார்டின் ஷூல்ஸ்சும் களம் கண்டனர். இவர்கள் தவிர மேலும் 5 வேட்பாளர்களும் களமிறங்கினர். இந்த தேர்தலில் 6 கோடியே 15 லட்சம் வாக்காளர்கள் வாக்குரிமை பெற்றிருந்தனர்.
தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் ஏஞ்சலா மெர்கல் மீண்டும் வெற்றி பெறுவார் என்றே கணிக்கப்பட்டது. அதன்படி, கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் சார்பில் போட்டியிட்ட ஏஞ்சலா மெர்கல் 33.2 சதவீதம் வாக்குகள் பெற்று வற்றி பெற்றார். சமூக ஜனநாயக கட்சி 20.8 சதவீதம் வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஜெர்மன் அதிபராக 4-வது முறையாக ஏஞ்சலா மெர்கல் பதவியேற்கவுள்ளார்.
தேர்தலில் வெற்றி பெற்றது குறித்து மெர்க்கல் கூறும்போது, "என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தவர்களுக்கு நன்றி. எனினும் இந்த தேர்தல் முடிவுகள் நாங்கள் எதிர்பார்த்த வெற்றியை அளிக்கவில்லை" என்றார்.
இவர் ஆட்சியில், முன்னெப்போதும் இல்லாத வகையில், ஜெர்மனியில் வேலையில்லாத் திண்டாட்டம் மிகக் குறைந்தளவில் உள்ளது. பொருளாதாரம் மிக வலிமையாக உள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் சர்வதேச அரங்கில், அதிக முக்கியத்துவம் வாய்ந்த நாடாக ஜெர்மனி திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.