ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் 27 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள ஜஸ்கிரிம் கடையருகே நேற்றிரவு நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் பொதுமக்கள் 16 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், பாக்தாத்தில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்தின் பரபரப்பு நீங்குவதற்குள்ளாக இன்று காலை மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. பாக்தாத்தின் முக்கிய பாலம் ஒன்றின் அருகே நின்றிருந்த கார் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.
முதல் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றது. மேலும், காரில் இருந்த ஈராகி என்பவர் தான் வெடி குண்டை வெடிக்கச் செய்தார் என ஐஎஸ்ஐஎஸ் தெரிவித்தது.
இரண்டாவது குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்பதாக அறிவிக்கவில்லை. எனினும், பாக்தாத்தில் பொதுமக்களை குறிவைத்து ஐஎஸ்ஐஎஸ் தொடர் தாக்குதலை நிகழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.