இரட்டைக் குடியுரிமை வைத்திருந்த ஆஸ்திரேலிய துணை பிரதமர் பர்னபி ஜாய்ஸ் உட்பட நான்கு பிற அரசியல்வாதிகளின் பதவிகளை, அந்நாட்டு உயர்நீதிமன்றம் ஒன்று தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டது. இதனால், ஒரேயொரு இடத்தை மட்டுமே பெரும்பான்மையாகக்கொண்டு செயல்பட்டு வந்த ஆஸ்திரேலிய கூட்டணி அரசாங்கத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அரசியலமைப்பு சட்டப்படி இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவை சேர்ந்தவரான பர்னபி ஜாய்ஸின் தந்தை நியூஸிலாந்தை சேர்ந்தவர். இதனால், இவர் இயல்பாகவே நியூஸிலாந்து குடிமகனாகிறார். இந்த விஷயம் கடந்த ஆகஸ்டு மாதம் தான் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து, தனது நியூஸிலாந்து குடியுரிமையை பர்னபி ஜாய்ஸ் திருப்பியளித்துவிட்டார். மேலும், ஆஸ்திரேலியாவின் கீழவையில் மீண்டும் போட்டியிடுவேன் எனவும் அறிவித்தார்.
இந்நிலையில், இதுதொடர்பான வழக்கை விசாரித்த ஆஸ்திரேலிய உயர்நீதிமன்றம் ஒன்று, பர்னபி ஜாய்ஸ் உட்பட, இரட்டைக் குடியுரிமைகொண்ட நான்கு பிற அரசியல்வாதிகள் தவறாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்தது. இதனால் அவர்கள் தங்கள் பதவிகளிலிருந்து நீக்கம் செய்யப்படுகிறார்கள்.
தனது நியூஸிலாந்து குடியுரிமையை பர்னபி ஜாய்ஸ் திருப்பியளித்ததால், அவரது தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் அவர் போட்டியிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தீர்ப்பு குறித்து பேசிய பர்னபி ஜாய்ஸ், “நீதிமன்ற தீர்ப்பை நான் மதிக்கிறேன். இதனால், நான் களங்கப் போவதில்லை. என் தொகுதி மக்களுக்காக தொடர்ந்து உழைப்பேன்”, என தெரிவித்தார்.