அமெரிக்காவின் தீவிர அழுத்தத்தையும் மீறி இன்று (சனிக்கிழமை) வட கொரியா, ஏவுகணை சோதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது. இதுகுறித்து, தென் கொரியா மற்றும் அமெரிக்க ராணுவம் கூறிய போது, இந்த ஏவுகணை சோதனை, வட கொரியாவின் தலைநகரான யோங்யாங் பகுதியின் வடக்கு பகுதியில் நிகழ்த்தப்பட்டது. ஆனால், இது தோல்வியில் முடிந்தது. கடந்த மார்ச் முதல் வட கொரியா ஏவிய வெற்றிகரமான நான்காவது தோல்வி சோதனை முயற்சியாகும் என குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் பேசுகையில், வட கொரியாவின் இந்த அணு மற்றும் ஏவுகணை சோதனைகளை ஐநா பாதுகாப்பு கவுன்சில் கட்டுப்படுத்த தவறிவிட்டது, இது பேரழிவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளார்.
வட கொரியாவின் இந்த சோதனை முடிவுகள் குறித்து பேட்டியளித்த அமெரிக்க அதிகாரிகள், இந்த ஏவுகணை நடுரக ஆயுதம் எனப்படும் கேஎன்-17 என்றும், சோதனை நடத்தப்பட்ட சில நிமிடங்களுக்குள்ளாகவே அந்த ஏவுகணை தானாகவே உடைந்துவிட்டது என்றனர். மேலும் இதுகுறித்து தென் கொரிய ராணுவம் வெளியிட்டுள்ள செய்தியில், ஏவுகணை பக்சங் எனும் பகுதியின் வடகிழக்குப் பகுதியில் இருந்து ஏவப்பட்டது. பின் சரியாக அது 71 கி.மீ (44 மைல்கள்) சென்ற போது, இலக்கை தாக்குவதற்கு முன்னர் அது சிதைவுற்றுவிட்டது என கூறியுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே, எண்ணற்ற முறையில் வட கொரியா, ஏவுகணைகளை சோதனை செய்வது, அணு ஆயுதம் தொடர்பான சோதனைகளை செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது. இதன்மூலம், இடைநிலை தொலைவிலான ஏவுகணைகள் மற்றும் நீர்மூழ்கி கப்பல் ஏவுகணைகள் போன்றவற்றில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக நம்பப்படுகிறது. குறிப்பாக, வட கொரியா நிறுவனரின் பிறந்தநாளான ஏப்ரல் 15-ஆம் தேதி, வட கொரியா நடத்திய நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணை சோதனையால், கொரிய தீபகற்பத்தில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
இந்த சோதனை குறித்து பேட்டியளித்த தென்கொரியாவின் யுங்நம் பல்கலைக்கழக நிபுணர் கிம் டாங், 'இந்த சோதனை முயற்சி, தென் கொரியா-அமெரிக்க கூட்டு இராணுவ பயிற்சிகள் முடிவில் சிக்கலான நேரத்தில் திட்டமிடப்பட்டது' என்றார்.
முன்னதாக, கடந்த வியாழனன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேசுகையில், வட கொரியா உலகளவில் மிகப்பெரிய சவாலை சந்தித்து வருவதாகவும், "பெரும், பெரும் மோதல்கள்" அவர்களது அணு மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையால் உண்டாகலாம் என்றார். மேலும், சீன தலைவர் ஜின் பிங், வடகொரியாவின் இந்த நடவடிக்கைகளுக்கு கடிவாளம் போட பெரும் முயற்சி எடுத்து வருவதாக ட்ரம்ப் பாராட்டு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று வட கொரியா நிகழ்த்திய ஏவுகணை சோதனை தோல்வியடைந்த பின், ட்ரம்ப் தனது ட்விட்டரில் 'மோசம்' என்று பதிவிட்டுள்ளார்.