தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரம் வரும் ஏப்ரல் 12ம் தேதி ‘டே ஜீரோ’ என்ற நிலையை எட்டவிருந்தது. தற்போது அந்த நாள் மே மாதத்திற்கு தள்ளிப் போடப்பட்டுள்ளது.
உலகிலேயே முதன்முறையாக ஒரு பெரு நகரம் (கேப் டவுன்) சொட்டுத் தண்ணீர் கூட இல்லாமல், முற்றிலுமாக தண்ணீரில்லா நிலைக்குப் போகப்போகிறது. இதைத் தான் ஆங்கிலத்தில் “டே ஜீரோ” (Day Zero) என்று சொல்கிறார்கள். வரும் ஏப்ரல் மாதம் 12-ம் தேதி, கேப்டவுன் நகரம் இந்த நாளை எட்டவிருந்தது.
இந்த நிலையில், விவசாயிகள் அமைப்பான க்ரோன்லேண்ட் நீர் பயனர் சங்கத்தினர், சுமார் 10,000 மில்லியன் லிட்டரை கேப் டவுனுக்கு இலவசமாக திறந்துவிட்டுள்ளனர். இதனால், கேப்டவுன் வாசிகளின் தண்ணீர் பற்றாக்குறைக்கு தற்காலிகமாக தீர்வு கிடைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல், 'டே ஜீரோ' நாள் மே மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
February 2018
இதுகுறித்து க்ரோன்லேண்ட் அமைப்பின் சிஇஓ ஜோஹன் கூறும்போது, "எங்களிடம் தண்ணீர் இருந்தது. ஏன் அடுத்த எல்லையில் தண்ணீர் தேவைப்படுபவர்களுக்கு கொடுக்கக் கூடாது என்று நினைத்தோம். அதனால் கேப் டவுனுக்கு சுமார் 10,000 மில்லியன் லிட்டர் தண்ணீரை திறந்து விட்டிருக்கிறோம். எங்கள் பகுதியில் மழை பெய்யாவிட்டால் நாங்களும் தண்ணீர் பற்றாக்குறையை எதிர் நோக்குவோம்" என்றார்.
க்ரோன்லேண்ட் விவசாயிகள் அமைப்பு திறந்துவிட்டுள்ள தண்ணீர் பல சிறிய அணைகளைக் கடந்து கேப் டவுனை இன்னும் சில தினங்களில் சென்றடையவுள்ளது.
கேப்டவுன் நகரில் 4 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். ஒரு காலத்தில் உலகின் பசுமையான நகரில் ஒன்றாக கேப்டவுன் நகரம் இருந்தது. ஆனால், உலக வெப்பமயமாதல், மழை பெய்யாமை, அரசின் மெத்தன போக்கு, அதைவிட மக்களின் அலட்சியம் ஆகிய காரணங்கள் ஒன்று சேர, இன்று ஒரு சொட்டுத் தண்ணீருக்காக கையேந்த உள்ளது கேப்டவுன் நகரம்.
கேப்டவுனுக்குப் பல காலமாக உயிர் ஆதாரமாக இருந்த தீவாட்டர்ஸ்க்லூஃப் (Theewaterskloof) அணையின் கொள்ளளவில், கடந்த 2016ம் ஆண்டு 13 சதவிகிதமாக இருந்தது. ஆனால், இப்போது நீர் 10%க்கும் குறைவான நிலையில் வறட்சியை உமிழ்ந்து கொண்டிருக்கிறது. நகருக்கு தண்ணீர் வழங்கும் வாய்ப்பைக் கொண்டிருக்கும் இன்னும் சில அணைகளும் 15% வந்துவிட்டன. அது 13.5% எனும் நிலையை எட்டும்போது, “டே ஜீரோ” நிகழும்.
இந்த கேப் டவுன் நகரில் தான் இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றன. சமீபத்தில் இதே மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது, இந்திய அணி வீரர்கள் 2 நிமிடத்திற்கு மேல் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.