இங்கிலாந்தில் மசூதியில் குர்-ஆன் கற்பிக்கும்போது பல இளம்பெண்களிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட இமாம் ஒருவருக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேல்ஸின் தலைநகரான கார்டிஃப் என்ற இடத்தில் அமைந்துள்ள மெதினா மசூதியில் இமாமாக இருந்தவர் மொஹமத் ஹாஜி சாதிக் (81). இவரிடம் அங்குள்ள பள்ளி மாணவிகள் ஏராளமானோர் குர்-ஆன் படித்து வந்தனர். அப்போது, அவர் இளம்பெண்களிடம் பாலியல் துன்புறுத்தலிலும், தவறான தொடுகையிலும் ஈடுபட்டு வந்தார்.
அதிலும், நிறைய பெண்களை வகுப்பில் அனைவரது முன்பிலும், பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு வந்தார். அதுமட்டுமல்லாமல், யாராவது தவறாக படித்தால், உலோகம் மற்றும் மரங்களால் ஆன தடியால் அவர்களை கடுமையாக தாக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
2006-ஆம் ஆண்டு இதுகுறித்து அவரிடம் படித்த மாணவிகள் இருவர் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், அந்த குற்றச்சாட்டுகளை சாதிக் மறுத்துவந்ததால் அந்த வழக்குகள் கிடப்பில் போடப்பட்டன. அதன்பின், மீண்டும் 2 பெண்கள் கடந்த 2016-ஆம் ஆண்டு பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளை அந்நாட்டு நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், சாதிக் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இந்த குற்றச்சாட்டுகளை தயங்காமல் பொதுவெளிக்கு கொண்டுவந்து வழக்கு தொடர்ந்த பெண்களை நீதிமன்றம் பாராட்டியது.
பெண்களிடம் தொடர்ந்து பல வருடங்களாக பாலியல் துன்புறுத்தல்களிலும், தவறான தொடுகையிலும் இமாம் ஒருவர் ஈடுபட்டு அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.