இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமின் எல்லையை ஒட்டியுள்ள டோகா லா பகுதியில் சீனா சாலைப்பணிகளை தொடங்கியது. இந்த பணிகளால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்ற நோக்கில் இந்திய வீரர்கள், அந்தப் பணிகளை தடுத்து நிறுத்தினர்.
இதனால், இரு நாடுகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இரு நாடுகளும் சிக்கிம் எல்லையில் தங்கள் படைகளை குவித்து வருகின்றன. ஆனால், இந்தியா தனது படைகளை வாபஸ் பெறாவிட்டால் ராணுவ நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக மிரட்டியுள்ள சீனா, இந்திய எல்லை அருகே போர் ஒத்திகையும் நடத்தி வருகிறது. இதனால் அங்கு போர் பதற்றம் நீடித்து வருகிறது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் ஜி20 மாநாடு நேற்று தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக ஃப்ரிக்ஸ் நாட்டு தலைவர்கள் சந்திப்பிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த அமைப்புகளில் இந்தியாவும், சீனாவும் உறுப்பினர்களாக உள்ள நிலையில் இந்த நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக இந்தியா பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின் பிங்கும் ஜெர்மனி சென்றுள்ளனர்.
இந்த நிலையில், ஹம்பர்க் நகரில் ஃப்ரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் சந்திக்கும் அதிகாரப்பூர்வமற்ற கூட்டம் நேற்று நடந்தது. சீனா ஏற்பாடு செய்திருந்த இந்த கூட்டத்தில், பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இதில் குறிப்பிடத்தகுந்த அம்சமாக, பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து முக்கிய பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இக்கூட்டத்தில் உரையாற்றிய மோடி, "ஜின்பிங்கின் தலைமையின் கீழ் ஃப்ரிக்ஸ் அமைப்பு மேலும் முன்னேற்றம் அடைவதுடன், வேகமான வளர்ச்சியை எட்டும். இதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பு எப்போதும் இருக்கும்" என்று உறுதியளித்தார்.
பின்னர் பேசிய ஜின்பிங், இந்தியாவின் தலைமையின் கீழ் ஃப்ரிக்ஸ் அமைப்பு கண்டுள்ள வளர்ச்சிக்காக பிரதமர் மோடியை பாராட்டினார். மேலும், ஃப்ரிக்ஸ் நாடுகளின் தலைவர்களை சந்திக்க ஆவலாக இருந்ததாகவும் அவர் கூறினார்.
ஹம்பர்க் நகரில் இரு தலைவர்களும் சந்தித்து பேசும் திட்டம் எதுவும் இல்லை என இருநாடுகளும் அறிவித்து இருந்த நிலையில், இந்த சந்திப்பு நிகழ்ந்ததுடன், இரு நாட்டு தலைவர்களும் ஒருவரையொருவர் பாராட்டி இருப்பதும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இந்தச் சூழ்நிலையில், இந்தியாவுக்கு செல்லும் தனது நாட்டு மக்களுக்கு சீனா இன்று பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், இந்தியா செல்லும் சீனர்கள், பாதுகாப்பு விஷயத்தில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். தேவையில்லாமல் அங்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம். தூதரகத்துடன் எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும் எனக்கூறியுள்ளது. மேலும், இந்தியாவில் இருக்கும் சீனர்கள், வீட்டை விட்டு வெளியே செல்லும் போது தவறாமல் ஐடி கார்டு எடுத்துச் செல்ல வேண்டும் என்றும், போகும் இடம் குறித்த விவரத்தை குடும்பத்தாரிடமும், நண்பர்களுடனும் முன்பே சொல்லிவிடுங்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
ஆனால், இது பயண எச்சரிக்கை அல்ல என்று இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.