இந்தியா - சீனா இடையே எல்லை பிரச்சனை காரணமாக தற்போது போர் பதற்றம் நிலவி வருகிறது. சிக்கிம் செக்டாரில், இருநாட்டு ராணுவத்திற்கு இடையே கடும் பதட்டம் நிலவி வரும் நிலையில், பிரச்சனையை மேலும் தீவிரப்படுத்துவது போல், சீனாவின் அரசு மீடியாவான குளோபல் டைம்ஸ் எழுதியுள்ளது. இது சீனாவின் நேரடி எச்சரிக்கையாக கருதப்படுகிறது.
'இந்தியா தன்னுடைய ராணுவத்தை திரும்ப பெறவில்லை என்றால் சிக்கிம் மாநிலத்தை இந்தியாவிடம் இருந்து பிரிப்போம்' என கூறிஉள்ளது குளோபல் டைம்ஸ். “சிக்கிம் விவகாரத்தில் சீனா தன்னுடைய நிலைப்பாட்டை மறு ஆய்வு செய்யும். 2003-ம் ஆண்டின் ஒப்பந்தத்தின் போது சிக்கிம்மை இந்தியாவின் ஒரு மாநிலமாக எற்றுக் கொண்டதை சீனா மறு பரிசீலனை செய்யும். சிக்கிம் தனிநாடு என்ற எண்ணம் கொண்டவர்கள் உள்ளனர், சிக்கிம் விவகாரத்தில் உலக நாடுகளின் பார்வை எப்படியிருக்கும் என உணர்ச்சிப்பூர்வமாக உள்ளனர்.
'சுதந்திர சிக்கிம்' என்பதற்கு சீன சமுதாயத்திலும் ஆதரவு உள்ளது. இது சிக்கிமில் சுதந்திர போராட்டத்திற்கு வழிவகைசெய்யும்" என குளோபல் டைம்ஸ் குறிப்பிட்டு உள்ளது. பூடான் - இந்தியாவுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள ஒப்பந்தப்படி பூடானின் எல்லையைப் பாதுகாக்கும் பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளது. இதனால்தான் பூடான் எல்லையில், இந்தியா ராணுவத்தை நிறுத்தி உள்ளது. இதனை விமர்சனம் செய்து உள்ள குளோபல் டைம்ஸ், சமமற்ற ஒப்பந்தங்கள் மூலம் சீனா, பூடானின் இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பை இந்தியா பாதிக்கிறது என குறிப்பிட்டு உள்ளது.