அமெரிக்காவின் அலாஸ்கா கடற்கரை வான்பரப்பில் பறந்து கொண்டிருந்த அடையாளம் தெரியாத மர்ம பொருளை அதிபர் ஜோ பைடன் உத்தரவின் பேரில் அமெரிக்க ராணுவம் நேற்று (வெள்ளிக்கிழமை) சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ளது. F-22 போர் விமானம் மூலம் மர்ம பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன் சீனாவின் உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில் தற்போது மர்ம பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டிருப்பது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க ராணுவமான பென்டகனின் தலைமை செய்தித் தொடர்பாளர் ஜெனரல் பேட்ரிக் ரைடர் கூறுகையில், வானில் சுட்டு வீழ்த்தப்பட்ட மர்ம பொருள் சிறிய கார் அளவில் இருந்தது என்று கூறினார். மேலும் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, இந்தப் பொருள் என்ன? யாருடையது என்று எந்த விவரமும் தெரியவில்லை என்றார்.
பென்டகனும் வெள்ளை மாளிகையும் இந்த பொருள் குறித்த விரிவான விளக்கத்தை கொடுக்க மறுத்துவிட்டன. அதே சமயம் சீன பலூனை விட இந்த மர்ம பொருள் மிகவும் சிறியதாக இருந்தது என்றும் மட்டும் தெரிவித்தனர்.
பென்டகன் கூறுகையில், “தரை ரேடார்களைப் பயன்படுத்தி வியாழக்கிழமை முதன்முதலில் இந்த பொருள் கண்டறியப்பட்டது. பின்னர் F-35 விமானம் மூலம் இந்த பொருள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. வடகிழக்கு திசையில் சுமார் 40,000 அடி (12,190 மீட்டர்) உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. விமானப் போக்குவரத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது” என்று கூறியது.
இதையடுத்து, வடகிழக்கு அலாஸ்காவின் கடற்கரை வான்பரப்பில் பறந்து கொண்டிருந்த போது மர்மப் பொருளை ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/