வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய மக்களை நினைவு கூர்வதாக மகிழ்ச்சியுடன் கூறினார்.
தீபாவளி பண்டிகை இன்று (அக்டோபர் 18) நாடு முழவதும் கொண்டாடப்படுகிறது. மக்கள் இதற்காக அதிகாலையிலேயே எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, அதிரசம், லட்டு, முறுக்கு என விதவிதமான பட்சணங்களைச் செய்து கொண்டாடி வருகின்றனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.
உலகம் முழுக்க இந்தியர் வாழும் இடங்களில் எல்லாம் தீபாவளி கொண்டாடுவது வாடிக்கை ஆகி வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையில் அதிபர் டோனால்ட் ட்ரம்ப் தீபாவளி பண்டிகையினை கொண்டாடினார். இந்தியா மற்றும் அமெரிக்க அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.
இந்த தீபாவளிக் கொண்டாட்டத்தில் ட்ரம்ப் தனது மகள் இவான்காவுடன் கலந்துகொண்டார். இந்த விழாவில் ட்ரம்ப் நிர்வாகத்தில் முக்கியப் பதவி வகிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹேலே, மருத்துவ சேவைகளுக்கான மையத்தின் நிர்வாகி சீமா வர்மா, அமெரிக்க பெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷனின் தலைவர் அஜித் பாய் மற்றும் அவரது முதன்மை துணை தகவல் தொடர்பு செயலாளரான ராஜ் ஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அமெரிக்க அதிபராக ஜார்ஜ் புஷ் இருந்தபோது வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடும் நடைமுறை கொண்டுவரப்பட்டது. அப்போது நிர்வாக அலுவலக கட்டடத்தில் உள்ள இந்திய ஒப்பந்த அறையிலேயே தீபாவளி கொண்டாட்டங்கள் நடைபெற்றன. எனினும் ஜார்ஜ் புஷ் தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்துகொண்டதில்லை.
ஒபாமாவின் பதவிக்காலத்தில் வெள்ளை மாளிகையின் கிழக்கு அறையிலேயே தீபாவளி கொண்டாட்டங்கள் நடந்தன. அவரின் ஆட்சிகாலத்தில் 2016-ம் ஆண்டே அதிபரின் அறையான ஓவல் அலுவலகத்தில் தீபாவளி கொண்டாடும் நடைமுறை கொண்டுவரப்பட்டது. டிரம்ப் முதல்முறையாக தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் விஞ்ஞானம், மருந்து, வர்த்தகம் மற்றும் கல்விக்கு இந்திய-அமெரிக்கர்களின் அசாதாரண பங்களிப்பை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பாராட்டினார். ‘நாம் தீபாவளியை கொண்டாடுவதன் மூலமாக மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்திய மக்களை நாம் நினைவில் கொள்கிறோம்’ என குறிப்பிட்ட டிரம்ப், உலகம் முழுவதும் வாழும் இந்தியர்களுக்கு தனது முகநூலின் வாயிலாக தீபாவளி வாழ்த்துகளையும் பகிர்ந்தார்.