சவுதியின் தென் மேற்கு மாநிலமான நஜ்ரானில், இந்தியா மற்றும் வங்காள நாட்டைச் சேர்ந்தவர்கள் தங்கியிருந்த ஒரு வீட்டில், திடீரென நேற்றிரவு தீ பிடித்தது.
அந்த வீட்டில் காற்றோட்ட வசதி சரியான முறையில் இல்லை என கூறப்படுகிறது. ஜன்னல்கள் கூட அங்கு அமைக்கப்படவில்லை. இதனால், தீவிபத்து ஏற்பட்டவுடன், அந்த இடத்தை புகை மண்டலம் முற்றிலுமாக சூழ்ந்திருக்கிறது. இதனால், உள்ளே தங்கியிருந்தவர்களில் 11 பேர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் 10 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மற்றொருவர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார். இதனை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, தீ விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நஜ்ரான் ஆளுநராக உள்ள இளவரசர் லுவி பின் அப்தெலாசிஸ், விபத்து குறித்து விசாரணை நடத்த குழு ஒன்றை அமைத்துள்ளார். மேலும், வாழத் தகுதி இல்லாத வீடுகளை வாடகைக்கு எடுப்பதை நிறுவனங்கள் கண்டிப்பாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
2015 -ம் ஆண்டு, சவுதி அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்களின்படி, பிற நாடுகளிலிருந்து வேலைக்காக சவுதிக்கு வருபவர்களின் எண்ணிக்கை ஒன்பது மில்லியன் ஆக உள்ளது. அவர்களில் பெரும்பாலானோர், தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டரில், "நஜ்ரானில் ஏற்பட்ட தீ விபத்தை நான் அறிந்திருக்கிறேன், அதில் நாம் 10 இந்தியர்களை இழந்துள்ளோம், காயமடைந்த ஆறு பேர் மருத்துவமனையில் உள்ளனர். ஜெத்தாவில் இருந்து 900 கி.மீ தொலைவில் நஜ்ரான் உள்ளது. இவ்விபத்து நடந்தவுடன், நமது நாட்டு அதிகாரிகள், நஜ்ரான் செல்லும் முதல் விமானத்தில் சென்றுள்ளனர். நம் தூத,ர் நஜ்ரான் ஆளுநருடன் தொடர்பில் உள்ளார். அங்கிருந்து அவர் தான் எனக்கு தொடர்ந்து அனைத்து விஷயங்களையும் கூறி வருகிறார்" என்று பதிவிட்டுள்ளார்.