27 வயதான பிரபல மாடல் ரேச்சல் ரிக்கர்ட், ஆட்டோமொபைல் நிறுவனமான ஹூண்டாய் மீது ஒரு விசித்திரமான வழக்கு தொடர முடிவு செய்துள்ளார்.
மூன்று மணி நேரத்திற்கு நடைபெறவிருந்த ஹூண்டாய் நிறுவனத்தின் சர்வதேச கார் ஷோ நிகழ்ச்சியை ரேச்சல் தொகுத்து வழங்க இருந்தார். அப்போது அவருக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கிறது.
இதுகுறித்து, அந்நிறுவன அதிகாரி எரிக்காவிடம் கூறி, தான் உடனடியாக வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றும், அதற்காக ஒருநாள் மட்டும் விடுப்பு வேண்டும் என கேட்டுவிட்டு வீட்டிற்கு சென்றிருக்கிறார். இதனையடுத்து, கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி எரிக்கவிடம் இருந்து வந்த ஃபோன் காலில், " ரிக்கெர்ட்டிற்கு மாதவிடாய் சுழற்சி வருவதால், இனிமேல் ஹூண்டாய் கம்பெனிக்காக எதையும் தொகுத்து வழங்க தேவையில்லை. ஆகையால், ரிக்கெர்ட் கம்பெனியில் இருந்து நீக்கப்படுகிறார்" என கூறியிருக்கிறார்.
இதுகுறித்து ரிக்கெர்ட் தனது புகாரில், "நம்மை மனிதர்களாகவே அவர்கள் மதிக்கவில்லை. என்னுடைய மாதவிடாய் சுழற்சியை நான் அசிங்கமாக நினைக்கப்போவதில்லை" என குறிப்பிட்டுள்ளார். ஆனால், ரிக்கெர்ட்டிடம் இருந்து அப்படி எந்தவொரு புகாரும் வரவில்லை என அமெரிக்க ஹூண்டாய் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
ரிக்கெர்ட் அளித்த புகார் உண்மையோ என்னவோ.... ஆனால், பெண்களுக்கு மாதவிடாய் என்பது பொதுவான ஒன்று. அதனை அசிங்கமாக பார்க்கும் மனப்பாங்கு மிகப்பெரிய மல்டிநேஷ்னல் நிறுவனங்களிலேயே உள்ளது மிகவும் வருத்தப்படக்கூடிய ஒரு விஷயமே. கலாச்சாரத்தில் வேறுபட்டு காணப்படும் மேற்கத்திய பெண்களாலேயே இதனை தாங்கிக் கொள்ள முடியவில்லை எனில், இதுபோன்று பிரம்மாண்ட நிறுவனங்கள் இந்தியாவில் பல உள்ளன. அதில், வேலை பார்க்கும் நம் சகோதரிகளின் நிலை..?