ஃபிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலண்டேவின் பதவிக்காலம் நிறைவடைகிறது. புதிய அதிபரை தேர்ந்தெடுக்க இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. ஆனால், தற்போதைய அதிபர் ஹோலண்டே இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. அவரது ஆட்சி மீது ஃபிரான்ஸ் மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டதன் காரணமாகவே தேர்தலில் போட்டியிடவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், லிபரல் சென்ட்ரிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இமானுவேல் மக்ரான் மற்றும் வலதுசாரி தலைவர் மரின் லீ பென் தான் இத்தேர்தலின் இரண்டு நட்சத்திர வேட்பாளர்கள் ஆவர். இதையடுத்து தற்போது நடந்த தேர்தலில், மக்ரான் 65 சதவிகித வாக்குகளுடன் மரீனை வீழ்த்தியுள்ளார். ஃபிரான்ஸ் நாட்டின் 24-வது அதிபராக இவர் மகுடம் சூட உள்ளார். மக்ரான் வெற்றிக்குப் பிறகு பேட்டியளித்த மரீன், 'வலிமையான எதிர்க்கட்சியாக செயல்படுவோம்' என்றார்.
ஃபிரான்ஸ் அதிபர் தேர்தலில் வெற்றி பெட்ரா மக்ரானுக்கு வயது 39. இவ்வளவு குறைந்த வயதில் ஒருவர் அந்நாட்டின் அதிபராவது இதுவே முதல்முறையாகும். தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிபர் மக்ரான், "இந்த வெற்றி ஃபிரான்சிற்கான புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக அமையும்" என்றார்.