Advertisment

66 குழந்தைகள் மரணம் எதிரொலி... இந்திய தயாரிப்பு 4 இருமல் 'சிரப்'-கள் பற்றி WHO எச்சரிக்கை

டைஎதிலீன் கிளைகோல் மற்றும் எத்திலீன் கிளைகோல் ஆகியவை வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, சிறுநீர் கழிக்க இயலாமை, தலைவலி, மனநிலை மாற்றம் மற்றும் கடுமையான சிறுநீரகக் காயம் உள்ளிட்ட நச்சு விளைவுகளை ஏற்படுத்தலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Gambia children death

After death of 66 children in Gambia, WHO warns about four Indian cough syrups

மேற்கு ஆப்பிரிக்காவின் சிறிய நாடான காம்பியாவில் 66 குழந்தைகள் இறந்ததைத் தொடர்ந்து, உலக சுகாதார அமைப்பு (WHO) இந்திய நிறுவனம் தயாரித்த நான்கு காய்ச்சல், சளி மற்றும் இருமல் சிரப்கள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது, அவற்றைப் பயன்படுத்த வேண்டாம் என்று மக்களை வலியுறுத்தியது.

Advertisment

ப்ரோமெதாசின் ஓரல் சொல்யூஷன், கோஃபெக்ஸ்மாலின் பேபி காஃப் சிரப், மாகோஃப் பேபி காஃப் சிரப் மற்றும் மேக்ரிப் என் கோல்ட் சிரப் – ஆகிய நான்கு சிரப்புகளும் - ஹரியானாவைச் சேர்ந்த மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது.

நான்கு தயாரிப்புகளில் ஒவ்வொன்றின் மாதிரிகளின் ஆய்வக பகுப்பாய்வு, அவற்றில் ஏற்றுக்கொள்ள முடியாத அளவு டைதிலீன் கிளைகோல் மற்றும் எத்திலீன் கிளைகோல் கலந்திருப்பதை உறுதிப்படுத்துகிறது. இன்றுவரை, இந்த நான்கு தயாரிப்புகளும் காம்பியாவில் அடையாளம் காணப்பட்டுள்ளன, ஆனால் முறைசாரா சந்தைகள் மூலம் பிற நாடுகளுக்கு அல்லது பிராந்தியங்களுக்கு விநியோகிக்கப்பட்டிருக்கலாம்” என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கையில் தெரிவித்துள்ளது.

தயாரிப்புகளின் அனைத்து தொகுதிகளும் அந்தந்த தேசிய ஒழுங்குமுறை அதிகாரிகளால் பகுப்பாய்வு செய்யப்படும் வரை "பாதுகாப்பற்றதாக கருதப்பட வேண்டும்" என்று அது கூறியது.

ஆதாரங்களின்படி, இந்தியாவின் மருந்து ஒழுங்குமுறை ஆணையம் - மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு - செப்டம்பர் 29 அன்று, இந்த பிரச்சினை குறித்து தெரிவிக்கப்பட்ட பின்னர் ஏற்கனவே இது குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.

ஹரியானா மாநில ஒழுங்குமுறை ஆணையம், மருந்து நிறுவனம் காம்பியாவிற்கு சிரப்களை தயாரித்து ஏற்றுமதி செய்தது என்பதை உறுதிப்படுத்தியது. நிறுவனம் இதுவரை காம்பியாவிற்கு மட்டுமே தயாரிப்புகளை விற்பனை செய்துள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தால் பரிசோதிக்கப்பட்ட 23 மாதிரிகளில், நான்கில் டைதிலீன் கிளைகோல் அல்லது எத்திலீன் கிளைகோல் கலந்திருப்பது கண்டறியப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன. இருப்பினும் இந்த மரணத்துடன் காரணமான தொடர்பு பற்றிய விவரங்களையோ அல்லது சிரப்கள் இறப்புக்கு வழிவகுத்ததற்கான ஆவணங்களையோ உள்-அரசு நிறுவனம், இந்தியாவுக்கு வழங்கவில்லை.

டைஎதிலீன் கிளைகோல் மற்றும் எத்திலீன் கிளைகோல் ஆகியவை வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, சிறுநீர் கழிக்க இயலாமை, தலைவலி, மனநிலை மாற்றம் மற்றும் கடுமையான சிறுநீரகக் காயம் உள்ளிட்ட நச்சு விளைவுகளை ஏற்படுத்தலாம்.

இந்த எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தரமற்ற தயாரிப்புகள் பாதுகாப்பற்றவை மற்றும் அவற்றின் பயன்பாடு, குறிப்பாக குழந்தைகளில், கடுமையான காயம் அல்லது மரணத்தை விளைவிக்கலாம், என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது.

தரமற்ற பொருட்களைக் கண்டறிந்து அகற்றுவதற்கு விநியோகச் சங்கிலிகளின் கண்காணிப்பை நாடுகள் அதிகரிக்க வேண்டும் என்றும் அது கூறியது. முக்கியமாக, முறைசாரா அல்லது ஒழுங்குபடுத்தப்படாத சந்தைகளைக் கண்காணிக்கவும் அழைப்பு விடுத்தது.

உங்களிடம் இந்த தரமற்ற பொருட்கள் இருந்தால், தயவுசெய்து அவற்றைப் பயன்படுத்த வேண்டாம். நீங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவர், இந்தத் தயாரிப்புகளைப் பயன்படுத்தியிருந்தால் அல்லது பயன்பாட்டிற்குப் பிறகு ஏதேனும் பாதகமான எதிர்விளைவு/நிகழ்வைச் சந்தித்திருந்தால், உடனடியாக தகுதிவாய்ந்த சுகாதார நிபுணரிடம் மருத்துவ ஆலோசனையைப் பெற்று, தேசிய ஒழுங்குமுறை ஆணையம் அல்லது தேசிய மருந்தக கண்காணிப்பு மையத்திற்கு புகாரளிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள் என்று WHO எச்சரிக்கை கூறியது.

இந்த தரமற்ற தயாரிப்புகள் ஏதேனும் தங்கள் நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டால் தெரிவிக்குமாறு தேசிய அதிகாரிகளிடம் கேட்கப்பட்டுள்ளது.

WHO இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், இந்த நான்கு இருமல் மற்றும் சளி சிரப்கள், இந்தியாவில் மைடன் பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட் தயாரிக்கிறது. இந்தியாவில் உள்ள நிறுவனம் மற்றும் ஒழுங்குமுறை அதிகாரிகளுடன் WHO மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது என்று கூறினார்.

இந்தியாவில், 2020 ஆம் ஆண்டில் ஜம்மு காஷ்மீரில் அதே டைதிலீன் கிளைகோல் கலந்த மற்றொரு பிராண்டின் இருமல் சிரப்பை உட்கொண்ட 17 குழந்தைகள் இறந்தனர். மற்றொரு சம்பவத்தில், கடந்த ஆண்டு புதுதில்லியில் டெக்ஸ்ட்ரோமெதோர்பான் கொண்ட இருமல் மருந்தை உட்கொண்டதால் குறைந்தது மூன்று குழந்தைகள் இறந்தது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment