பிரதமர் மோடி, மூன்று நாள் சுற்றுப்பயணமாக போர்ச்சுக்கல், அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளார். தற்போது அமெரிக்கா சென்றுள்ள மோடி, அங்குள்ள முன்னணி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளின் மாநாட்டில் கலந்துகொண்டார். அடோப், அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களின் சி.இ.ஓ-க்களுடன், கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சையும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டார்.
இதுகுறித்து பேசிய சுந்தர் பிச்சை, "இந்திய பிரதமர் மோடி கலந்துகொண்ட இந்த மாநாடு, இந்தியாவுக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக அமைந்துள்ளது. பல முக்கிய யோசனைகள் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. இந்தியாவில் முதலீடு செய்ய அனைவரும் ஆர்வமாக உள்ளனர். நாங்களும் எல்லோருடனும் ஒன்றிணைந்து பணியாற்றுவதில் ஆர்வமாக உள்ளோம். ஜூலை 1-ம் தேதி ஜி.எஸ்.டி மசோதா அமலுக்கு வருவதை நாங்கள் எதிர்பார்த்து வருகிறோம். மாற்றத்துக்கு இது ஒரு தொடக்கமாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.