கடந்த 50 வருடங்களில் இல்லாத அளவிற்கு அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மாகாணத்தை ‘ஹார்வே’ சூறாவளி புரட்டிப் போட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு டெக்சாஸ் மாகாணத்தில் பலத்த மழை பெய்யத்தொடங்கியது. இந்த சூறாவளி காரணமாக மணிக்கு 215 கி.மீ. வேகத்தில் பேய்க்காற்று வீசியது.
1961-ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்காவைத் தாக்கும் மிக மோசமான சூறாவளி இதுவாகும். கல்ஃப் கோஸ்ட் பகுதியில் வலுவிழப்பதற்கு முன் இந்த சூறாவளிக்கு 2 பேர் பலியாகி உள்ளனர். மேலும், 14 பேரின் எலும்புகள் உடைந்து அவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
சூறாவளி காரணமாக பெரிய பெரிய மரங்கள் கூட வேரோடு சாய்ந்தன. கார்பஸ் கிறிஸ்டி நகர் உள்பட பல நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 2 லட்சத்து 11 ஆயிரம் வீடுகள் இருளில் மூழ்கின. பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.
இந்தப் சூறாவளி தாக்கிய 3 மணி நேரத்தில் அது 3-வது வகை புயலாக தரம் குறைக்கப்பட்டது. காற்றும் மணிக்கு 201 கி.மீ. வேகமாக குறைந்தது. இருப்பினும் இது உயிராபத்தினை ஏற்படுத்தக்கூடிய நிலையிலேயே உள்ளது. கட்டிடங்களுக்கு பெருத்த சேதத்தை விளைவிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
டெக்சாஸ் மாகாண கவர்னர் அப்பாட் கூறும்போது, “டெக்சாஸ் மாகாணம் பேரழிவை சந்திக்கிறது. 1000 தேசிய பாதுகாவலர்கள், பேரழிவு நிவாரண பணியில் ஈடுபட்டுள்ளனர்” என தெரிவித்தார். நேற்று காலை 5 மணி நிலவரப்படி தென்கிழக்கு டெக்சாஸ்சில் 10 அங்குலம் மழை பெய்துள்ளது.
டெக்சாஸ் மாகாணத்தை 'பேரழிவு மாகாணம்' என ஜனாதிபதி டிரம்ப் அறிவித்து பிரகடனம் செய்துள்ளார். இதன் காரணமாக அந்த மாகாணத்துக்கு மத்திய நிதி உதவி கிடைக்கும். மேலும் அடுத்த சில நாட்களில் டிரம்ப், டெக்சாஸ் மாகாணத்தில் புயல், வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிடுவார் எனவும் தகவல்கள் கூறுகின்றன.
ஹார்வே சூறாவளி, டெக்சாஸ் மாகாணத்தில் தொடரவும், பலத்த மழையை தொடர்ந்து பெய்விக்கவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.