லண்டன்: அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து... பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்!

லண்டனில் ஒயிட் சிட்டி மாவட்டத்தின் லாட்டிமர் சாலையில் உள்ள ‘க்ரென்ஃபெல்’ எனும் 27 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் மிக பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீயை அணைக்க 40 தீயணைப்பு வண்டிகளில் வந்த 200 வீரர்கள் தீயை அணைக்க கடுமையாக போராடி வருகின்றனர்.

இரண்டாம் மாடியில் ஏற்பட்ட தீ, கட்டிடம் முழுவதும் பரவிவிட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். அந்த அடுக்குமாடி குடியிருப்பில் மொத்தம் 120 வீடுகள் உள்ளன. முன்னதாக தீ விபத்து ஏற்பட்டதையடுத்து கட்டடத்தில் இருந்து 30 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், இந்த விபத்தில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

london fire

இது குறித்து லண்டனின் தீயணைப்புத்துறை கமிஷனர் கூறியதாவது: இந்த தீ விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இது மிகப்பெரிய கட்டடம் என்பதால் விபத்தில் சிக்கி உயிரிழந்திருப்பவர்களின் எண்ணிக்கையை இப்போது கூறஇயலாது. என்னுடைய 29-ஆண்டுகால பணி அனுபத்தில் இதுபோன்ற ஒரு மோசமான தீ விபத்தை பார்த்ததில்லை. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இது ஒரு சோகமான சம்பவம் என்று கூறினார்.

தீ விபத்தில் இருந்து தப்பித்து வந்த ஒருவர் கூறியதாவது: நான் அதிர்ஷ்டவசமாக இந்த மோசமான தீ விபத்தில் இருந்து தப்பித்துள்ளேன். ஆனாலும்,  கட்டடத்தில் இருந்து பலர் வெளிவர முடியாமல் சிக்கிக் கொண்டனர். என்னுடைய உடைமைகள் அனைத்தும் தீக்கிரையாகிவிட்டன என்று கூறினார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest International news in Tamil.

×Close
×Close