ஈராக் நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான மொசூல், டைக்ரிஸ் நதிக்கரையில் அமைந்துள்ளது. அங்கு 15 லட்சத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். பயங்கரவாதிகள், 3 ஆண்டுகளுக்கு முன்பு மொசூல் நகரைக் கைப்பற்றினார்கள்.
மேலும், மொசூல் நகரில் தங்களது இயக்கத்தினரை அதிக அளவில் குவித்தனர். உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களை குறிவைத்து தங்கள் இயக்கத்தில் ஆள் சேர்த்து வந்தனர் ஐ.எஸ். தீவிரவாதிகள். சிரியாவின் சில பகுதிகளையும், ஈராக்கில் தாங்கள் கைப்பற்றிய மொசூல் நகரையும் இணைத்து அதனை தனி நாடாகவும் அறிவித்தனர்.
இதையடுத்து, அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினரின் உதவியுடன், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், மொசூல் நகரை மீட்க தீவிர தாக்குதலை முடுக்கிவிட்டது ஈராக் ராணுவம். இரு தரப்பினருக்கும் இடையே போர் உக்கிரம் அடைந்ததால் உயிர் பிழைப்பதற்காக 9 லட்சம் மக்கள் வேறு இடங்களுக்கு புலம் பெயர்ந்தனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் போரில் கொல்லப்பட்டனர்.
இந்தநிலையில், கடந்த சில வாரங்களாக ஈராக் ராணுவம் கூட்டுப் படையினரின் உதவியுடன் மொசூல் நகரின் நாலாபுறத்தையும் சுற்றி வளைத்தது. இதையடுத்து, தப்ப வழி தெரியாமல் திணறிய ஐ.எஸ். பயங்கரவாதிகள் மொசூல் நகர மக்களை, மனித கேடயங்களாக பயன்படுத்தி சண்டையில் ஈடுபட்டனர். இறுதியில் மொசூல் நகரை ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து ராணுவம் முற்றிலுமாக மீட்டது.
இந்தவெற்றியை நாட்டு மக்களிடம் பிரதமர் ஹைதர் அல்-அபாதி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும், "ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டப்பட்டு விட்டது. மொசூல் நகரம் ராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது" என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். அமெரிக்கா தலைமையிலான கூட்டு படையினருக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
எனினும், மொசூல் நகரின் பல பகுதிகள் தொடர்ந்து தங்கள் வசம் இருப்பதாக கூறும் பயங்கரவாதிகள் உயிர் பிரியும் வரை போரிடுவோம் என்று தெரிவித்து உள்ளனர்.