லாஸ்வேகாஸ் இசை நிகழ்ச்சி துப்பாக்கி சூட்டில் பலி 59 ஆனது. இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பொறுப்பேற்றதாக தகவல் வெளியானது. ஆனால், காவல்துறை இதனை மறுத்துள்ளது.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் மண்டலே பே கேஸினோ ஹோட்டலில் அக்டோபர் 1-ம் தேதி இரவு இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது மர்ம நபர் ஒருவர் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினார். நட்சத்திர விடுதியின் மைதானத்தில் திரண்டிருந்த மக்கள் மீது அருகில் உள்ள கட்டடத்தின் 32-வது மாடியில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் அனைவரும் அலறி அடித்து ஓட, பலர் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து கீழே சரிந்தனர். இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 59 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 500-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்து இருப்பதாகவும் பிபிசி வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள மருத்துவமனையில் பலருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபரை சுட்டுக் கொன்றுவிட்டதாக லாஸ் வேகாஸ் காவல்துறையை மேற்கோள் காட்டி முதலில் செய்திகள் வந்தன. ஆனால், மேலும் சில நபர்கள் இத்தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களால் சந்தேகிக்கப்படுகிறது.
நூற்றுக்கும் அதிகமான முறை துப்பாக்கிச் சத்தம் கேட்டதாக மக்கள் தெரிவித்தனர். சம்பவம் நடைபெற்ற இடத்தை முற்றிலும் ஆக்கிரமித்த போலீஸார், யாரும் அங்கு உள்நுழைய தடை விதித்து தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
துப்பாக்கிச்சூடு நடத்திய 65 வயது முதியவர் ஸ்டீபன் படாக்கும் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக பின்னர் வந்த தகவல்கள் கூறின. இசை நிகழ்ச்சியில் சுமார் 22,000 பேர் பங்கேற்று இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொலையாளி ஸ்டீபன்பாடக் அறையில் இருந்து 8-க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் இந்தியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
இந்தநிலையில் அமெரிக்கா லாஸ்வேகாஸில் இசை நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றதாக தகவல்கள் வெளியானது. ஆனால், இதனை காவல்துறையினர் மறுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "தாக்குதல் நடத்திய ஸ்டீபன், முஸ்லீம் மதத்துக்கு மாறியுள்ளார். ஆனால், இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு தான் இத்தாக்குதலை நடத்தியது என்பதற்கு இதுவரை எந்தவித ஆதாரமும் எங்களுக்கு கிடைக்கவில்லை. இத்தாக்குதல் நடத்தப்பட்ட காரணத்தை இதுவரை அறிய முடியவில்லை. தொடர்ந்து தீவிர விசாரணை நடந்துக் கொண்டிருக்கிறது" என்றனர்.