அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் இன்று நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 200 பேர் காயம் அடைந்து இருப்பதாகவும் பிபிசி வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள மருத்துவமனையில் பலருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபரை சுட்டுக் கொன்றுவிட்டதாக லாஸ் வேகாஸ் காவல்துறை தெரிவித்துள்ளது. ஆனால், மேலும் சில நபர்கள் இத்தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களால் சந்தேகிக்கப்படுகிறது.
லாஸ் வேகாஸ் நகரத்தில் உள்ள மண்டலே பே கேஸினோ ஹோட்டலில் தான் இந்த இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டுக் கொண்டிருந்தது.
அப்போது திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலையடுத்து மக்கள் அங்கும் இங்குமாக சிதறி ஓடினர்.
நூற்றுக்கும் அதிகமான முறை துப்பாக்கிச் சத்தம் கேட்டதாக மக்கள் தெரிவித்தனர். சம்பவம் நடைபெற்ற இடத்தை முற்றிலும் ஆக்கிரமித்த போலீஸார், யாரும் அங்கு உள்நுழைய தடை விதித்து தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், லாஸ் வேகாஸ் போலீஸார் அளித்துள்ள பேட்டியில், "வேறு யாரேனும் தாக்குதல் நடத்தியிருப்பார்கள் என்பதை நாங்கள் நம்பவில்லை" என்று கூறியுள்ளனர்.