லண்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இதுவரை 6 பேர் உயிரிழந்தனர். 70 பேர் காயமடைந்துள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பில் தொடர்ந்து எரிந்து வரும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடிவருகின்றனர்.
Advertisment
லண்டனில் ஒயிட் சிட்டி மாவட்டத்தின் லாட்டிமர் சாலையில் உள்ள 'க்ரென்ஃபெல்' எனும் 27 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அந்த குடியிருப்பில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் 40 தீயணைப்பு வண்டிகளில் வந்த 250-க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரண்டாம் மாடியில் ஏற்பட்ட தீ, கட்டிடம் முழுவதும் பரவிவிட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். அந்த அடுக்குமாடி குடியிருப்பில் மொத்தம் 120 வீடுகள் உள்ளன. இந்நிலையில், தீ விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் அங்குள்ள 6 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து லண்டனின் தீயணைப்புத்துறை கமிஷனர் கூறியதாவது: என்னுடைய 29-ஆண்டுகால பணி அனுபத்தில் இதுபோன்ற ஒரு மோசமான தீ விபத்தை பார்த்ததில்லை. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இது ஒரு சோகமான சம்பவம் என்று கூறினார்.
தீ விபத்தில் இருந்து தப்பித்து வந்த ஒருவர் கூறியதாவது: நான் அதிர்ஷ்டவசமாக இந்த மோசமான தீ விபத்தில் இருந்து தப்பித்துள்ளேன். ஆனாலும், கட்டடத்தில் இருந்து பலர் வெளிவர முடியாமல் சிக்கிக் கொண்டனர். என்னுடைய உடைமைகள் அனைத்தும் தீக்கிரையாகிவிட்டன என்று கூறினார்.