மலேசியாவில் வசித்து வந்த தமிழ் வாலிபர் டி.நவீன் என்பவருக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் போல மிகப் பெரிய இசையமைப்பாளராக வர வேண்டும் என்பது ஆசை.
இந்த நிலையில், கடந்த 10-ஆம் தேதி, தனது நண்பர் பிரவீன் என்பவருடன் ஒரு பேக்கரியில் 'பர்கர்' வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நவீனுக்கு அறிமுகமான 2 வாலிபர்கள், நவீனையும் பிரவீனையும் கிண்டல் செய்துள்ளனர். இதில் இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
அந்த இரண்டு வாலிபர்களுடன் மேலும் மூன்று வாலிபர்கள் சேர்ந்து நவீனையும், பிரவீனையும் ஹெல்மெட்டுகளால் கடுமையாக தாக்கத் தொடங்கினர். இதில் பிரவீன் தப்பித்து ஓடி விட, நவீன் அவர்களிடம் சிக்கிக் கொண்டார். அவர்கள் நவீனை விடாமல் தாக்கி, அவருடன் தகாத முறையில் உறவு கொண்டு, பின்புறத்தை தீயால் சுட்டு சித்ரவதை செய்தனர்.
இதனால், படுகாயம் அடைந்த நவீன், அங்கிருந்து மீட்கப்பட்டு ஜார்ஜ் டவுன் பினாங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நவீன் மீது தாக்குதல் நடத்திய ஐந்து பேரும், அவருடன் ஒன்றாக ஒரே பள்ளியில் படித்தவர்கள் என தெரிகிறது. இச்சம்பவம் அங்கு வாழ்கின்ற தமிழ் மக்களிடையே சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, மருத்துவமனையில் நவீன் அனுமதிக்கப்பட்டிருந்த போது, ஏ.ஆர்.ரஹ்மானே தனது ட்விட்டரில், "நவீன் விரைவில் குணமடைய பிராத்தனை செய்கிறேன்" என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.