மான்செஸ்டரில் நேற்று நடைபெற்ற பாப் நிகழ்ச்சின் முடிவில் தற்கொலைப்டை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலின் போது 22 பேர் உயிரிழந்தனர். இந்த கொடூர தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் நபரின் பெயர் சல்மான் அபேதி என தெரியவந்துள்ளது. சல்மான் அபேதியின் பெற்றோர் லிபியாவில் இருந்து இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தவர்கள் என இங்கிலாந்து போலீஸார் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து பிரதமர் தெரசா மே இதனை உறுதிபடுத்தியுள்ளார்.
தெற்கு மான்செஸ்டர் பகுதியில் உள்ள பெல்லோவ்ஃபில்ட் பகுதியில் அவர்கள் கடந்த 10-வருடங்களாக வசித்து வந்துள்ளனர். இதனிடையே, அவர்கள் வீட்டிற்கு சென்ற இங்கிலாந்து போலீஸார் நேற்று அங்கு தீவிர சோதனை நடத்தினர். மேலும், சல்மான் அபேதி சமீபத்தில் லிபியாவிற்கு பயணம் செய்தாரா என்றும், அவருக்கு அங்கு ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பு இருந்ததா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சந்தேகிக்கப்படும் சல்மான் அபேதியின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
இதனிடையே, மான்செஸ்டரில் இயங்கிவரும் சால்போர்டு பல்கலைக்கழகத்தில் சல்மான் சபேதி படித்து வந்தார் என அந்த பல்கலைக்கழக நிர்வாகம் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளது.
முன்னதாக, குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக கூறி தெற்கு மான்செஸ்டரில் 23-வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரை அந்நாட்டு போலீஸார் கைது செய்திருந்தனர். அவர், அபேதியின் சகோதராராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.