மான்செஸ்டர் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மான்செஸ்டர் நகரில் உள்ள மைதானம் ஒன்றில், அமெரிக்க இசைக் கலைஞர் அரியானா கிராண்டேவின் இசை நிகழ்ச்சி நடந்தது. அந்நிகழ்ச்சியையொட்டி அங்கு ஏராளமானோர் திரண்டிருந்தனர்.இதனிடையே நிகழ்ச்சியின் முடிவில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டுவெடிப்பு நிகழ்ந்து. உடலில் சக்திவாய்ந்த குண்டுகளை சுமந்து சென்ற தற்கொலை தீவிரவாதி இந்த தாக்குதலை நிகழ்த்தியதாக கூறப்படுகிறது. உள்ளூர் நேரப்படி நேற்றிரவு நடத்தப்பட்ட இந்த மோசமான தாக்குதலின் போது 22 பேர் உயிரிழந்தனர், 59 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை, அந்த இயக்கத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து சுமார் 400 போலீஸார் நேற்றிரவு முதல் தேடுதல் வேட்டையில் இறங்கினர். மேலும், குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த பகுதியில் இருந்த பொதுமக்களால் எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோ ஆகிவற்றைக் கொண்டும் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
முன்னதாக, இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக இளைஞர் ஒருவரை அந்நாட்டு போலீஸார் கைது செய்தனர்.