அண்டார்டிகா பனிப் பாறையில் மிகப்பெரிய பிளவு: சென்னையைப் போன்று 13 மடங்கு!

இந்த பெரிய அளவிலான பனிப்பாறை தென் துருவத்தை நோக்கி நகரும் பட்சத்தில் கப்பல்களுக்கு பேராபத்து ஏற்படும்.

அண்டார்க்டிக் தீபகற்பம் தான், 20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பூமியின் வேகமான வெப்ப மண்டலங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த வெப்பமடைதல் மிகவும் ஆழ்ந்த சுற்றுச்சூழல் மாற்றங்களை உண்டாக்கி வருகிறது.

இந்த அந்நிலையில், அண்டார்டிகாவின் “லார்சன் சி” (Larsen C) எனும் பனிப்பாறையில் மிக நீளமான பிளவு ஏற்ப்பட்டுள்ளது. மேலும், அந்த பிளவில் முக்கியமான மாற்றம் ஒன்றும் ஏற்பட்டுள்ளது. இதுவரை கண்டிராத மிகப்பெரிய பனித் தகர்வு (பனிப்பாறைகள் உடைப்பு) ஏற்படுவதற்கான அபாயத்தைக் கொண்டிருக்கும் அந்த பனிப் பிளவு, ஆச்சரியப்படும் வகையில் திசை மாறியிருக்கிறது. அந்தப் பிளவு மேலும் 16 கிலோமீட்டர் நீளத்திற்கு விரிவடைந்து, பனியடுக்கின் விளிம்பில் இருந்து 12 கிலோ மீட்டர் அளவு திரும்பியிருக்கிறது.

இதுகுறித்து ஸ்வான்சீ பல்கலைக்கழக பேராசிரியர் அட்ரியன் லுக்மன் தெரிவிக்கும் போது, “மேற்கு அண்டார்டிகாவில் அமைந்துள்ள லார்சன் சி பனியடுக்கு பகுதியில், ஜூலை 10 மற்றும் 11ம் தேதிகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறோம். இப்போது உருவாகியுள்ள பனிப்பாறை உலகின் மிக பெரிய அளவாக கணக்கிடப்பட்டுள்ளது. இது சுமார் ஒரு லட்சம் கோடி டன் எடை கொண்டதாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பனிப் பாறையில் ஏற்பட்டிருக்கும் பிளவால் பேராபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இந்த பெரிய அளவிலான பனிப்பாறை தென் துருவத்தை நோக்கி நகரும் பட்சத்தில் கப்பல்களுக்கு பேராபத்து ஏற்படும். இந்த பனிப் பிளவு 200 கிலோமீட்டர் நீளம் வரை உள்ளது. இது சுமார் 5 ஆயிரம் சதுர கிலோமீட்டர், அதாவது வேல்ஸின் பரப்பளவில் நான்கில் ஒரு பகுதியைக் கொண்டதாக இருக்கும். கடந்த மாதம் வரை இருந்த நிலை மாறி, திடீரென அங்கு விரிசல் ஏற்பட்டுவிட்டது. இந்த புதிய விரிசலின் கிளைப் பகுதி நீட்சியடைந்து கடலை நோக்கி இப்போது திரும்பியுள்ளது தான் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

பனிப்பாறைகள் பிளவு குறித்து ஆய்வு நடத்துபவரான கெல்லி ப்ரண்ட் கூறுகையில், “வடக்கில் உள்ள பனியடுக்கின் லார்சன் ஏ, லார்சன் பி பகுதிகளில் இதுபோன்ற பனித் தகர்வுகள் முன்பு ஏற்பட்டபோது, அவை முற்றிலுமாக நொறுங்கிப் போயின. இதேபோன்று லார்சன் சி பகுதியிலும் நிகழுமோ என்று விஞ்ஞானிகள் கவலையுடன் கண்காணித்து வருகிறார்கள். பனியடுக்கு உடைந்தால், இதே போன்ற உடைப்புகள் அண்டார்டிக் தீபகற்பம் முழுவதும் தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.

1963-ஆம் ஆண்டு முதன் முதலாக அமெரிக்க செயற்கைக்கோள் தான், லார்சன் சி பனிப்பாறை உருவாகி இருப்பதை கண்டுபிடுத்து படமெடுத்து அனுப்பியது. இந்த “லார்சன் சி” பனிப்பாறை, சென்னையைப் போன்று 13 மடங்கு அளவு பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close