கணிதம் பாடப்பிரிவில் நம்பமுடியாத அளவுக்கு அறிவை கொண்டுள்ள ஈரானை சேர்ந்த 14 வயது சிறுவன், உலகிலேயே மிகவும் இளம் வயதில் கௌரவ விரிவுரையாளராகி சாதனை படைத்துள்ளார்.
ஈரானை சேர்ந்த யாஷா ஆஸ்லே என்ற 14 வயது சிறுவன் தான் இந்த பெருமைக்கு சொந்தக்காரர். இவர், பிரிட்டனில் உள்ள லேசெஸ்டர் பல்கலைக்கழகத்தில் கணித துறை பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். அதேசமயம், தனது பட்டப்படிப்பையும் தற்போது யாஷா ஆஸ்லே படித்து வருகிறார்.
இவரது தந்தை மௌசா ஆஸ்லே தினந்தோறும் தன் மகனை பல்கலைக்கழகத்திற்கு அழைத்து சென்று விடுகிறார். யாஷா ஆஸ்லேவுக்கு எப்போதும் கணிதத்தின் மீது தனிப்பட்ட பிரியம் உண்டு. இந்த இளம் வயதிலேயே தன் மகன் பேராசிரியர் ஆனதற்கு அவரது தந்தை மௌசா ஆஸ்லே பெருமை கொள்கிறார்.
கணிதத்தின் மீது ஆழ்ந்த அறிவு கொண்டிருக்கும் தன் மகனுக்காக மௌசா ஆஸ்லேதான் அந்த பல்கலைக்கழகத்திற்கு மகனின் அறிவு குறித்து தெரியபடுத்துகிறார். அப்படி, பல்கலைக்கழகத்திற்கு யாஷா ஆஸ்லே செல்லும்போது அவருக்கு வயது 13 தான்.
யாஷா ஆஸ்லேவை லேசெஸ்டர் பல்கலைக்கழகம் தொடர்புகொண்டு ஒருமுறை மாதிரி வகுப்பு எடுத்துக் காண்பிக்க கூறினர். அப்போது, அவரது திறமையை பரிசோதித்த இண்டர்வியூ குழுவினர் அசந்துபோயினர். அதன்பின், அந்த பல்கலைக்கழகத்தில் யாஷா ஆஸ்லே கௌரவ விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார். இப்போது, தன்னை விட அதிக வயதுடைய இளைஞர்களுக்கு தன் மகன் வகுப்பு நடத்துவதை பார்த்து அவரது தந்தை திருப்தியடைகிறார்.
தற்போது பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கும் யாஷா, அதன்பின் பிஎச்.டி. படிக்க வேண்டும் என்பதை விருப்பமாக கொண்டிருக்கிறார். முதன்முறை அப்பல்கலைக்கழகத்திற்கு யாஷா சென்றபோது அவருக்கு பல வித்தியாசமான கேல்விகள் கேட்கப்பட்டன. அந்த கேள்விகள் அனைத்திற்கும் யாஷா சரியான விடையை அளித்தபோதுதான், அவர் இந்த கல்வி நிறுவனத்துக்கு எவ்வளவு பெரிய சொத்து என்பதே பல்கலைக்கழக நிர்வாகத்துக்கே புரிந்தது.
இந்த இளம் வயதில் கௌரவ விரிவுரையாளராக நியமிக்கப்பட்டதற்கு யாஷா, அந்நாட்டு மனிதவள மேம்பாட்டு துறையிடமிருந்து பல அனுமதி பெற வேண்டியிருந்தது.
தனக்கு இந்த இளம் வயதில் வேலை கிடைத்ததை விட, தன் மாணவர்களின் அறிவை விரிவுபடுத்த தான் பங்கு அளிப்பதையே திருப்திகரமானதாக கூறுகிறார், இந்த இளம் விரிவுரையாளர் யாஷா ஆஸ்லே.