அணு ஆயுதங்களுக்கு எதிராக கடந்த 10 வருடங்களாக செயல்பட்டு வரும் ஐகேன் அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
2017-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன. இயற்பியல், மருத்துவம், இலக்கியம் ஆகிய பிரிவுகளை தொடர்ந்து, அமைதிக்கான நோபல் பரிசு வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி நார்வே நாட்டில் நடைபெற்றது. அதில், தேர்வுக்குழு தலைவர் அமைதிக்கான நோபல் பரிசை அறிவித்தார். அணு ஆயுதங்களுக்கு எதிராக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் ஐகேன் (International Campaign to Abolish Nuclear Weapons) அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, ஜெனீவாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
உலகம் முழுவதும் தீவிரவாதம் தலைதூக்கியிருக்கிறது. உலக நாடுகள் தங்களின் அணு ஆயுதங்களை தூக்கியெறிந்து அன்பின் வழியில் செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக, ஐகேன் அமைப்புக்கு கொடுக்கப்பட்ட நோபல் பரிசு பார்க்கப்படுகிறது.
ஐகேன் அமைப்புக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டதை வரவேற்று, அணு ஆயுதங்கள், அணு உலைகளுக்கு எதிராக தொடர்ந்துபோராடிவரும் ’பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பு அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
“1985ல் நோபல் அமைதிக்கான பரிசு பெற்ற அணு ஆயுத போர் எதிர்ப்புக்கான சர்வதேச மருத்துவர்கள் அமைப்பால் 2007ல் தொடங்கப்பட்டது ஐகேன் (அணு ஆயுத ஒழிப்புக்கான சர்வதேச பிரச்சாரம்) அமைப்பு. கடந்த பத்தாண்டுகளாக, இந்த அமைப்பு உலகம் முழுவதுமுள்ள 15,000க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்களை ஒழிக்க வேண்டும் என்கிற குறிக்கோளோடு பல பிரச்சாரங்களை மேற்கொண்டது. கடந்த ஜூலை மாதம் அணு ஆயுதங்களுக்கு எதிராக 122 நாடுகளை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைத்தது ஐகேன் அமைப்பு.
இப்படிப்பட்ட ஒரு அமைப்பு, இந்த விருதுக்காக தேர்வு செய்யப்பட்டிருப்பது மிக பொருத்தமானது.
உலக அமைதியை நோக்கிய முக்கியமான ஒரு செயல்பாடாக அணு ஆயுத அழிப்பு இருக்கும் என்பதில் மனிதத்தில் நம்பிக்கை கொண்ட யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அத்தகைய செயல்பாடுகளுக்காக மட்டுமே இயங்கி வரும் ஐகேனுக்கு 2017க்கான அமைதி நோபல் பரிசு வழங்கப்பட்டிருப்பது, அணு ஆயுத ஒழிப்பு பிரச்சாரத்தில் மிக முக்கியமான ஒரு நகர்வு.
பூவுலகின் நண்பர்கள் இந்த விருது அறிவிப்பை பெரும் மகிழ்வோடும் நம்பிக்கையோடும் வரவேற்கிறது.
வரலாற்று சிறப்பு மிக்க இந்த தருணத்தில் “காந்தியின் தேசமான” இந்தியாவும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அணு ஆயுத ஒழிப்பில் தன்னை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் என்றும் கோருகிறோம்.”, என கூறப்பட்டுள்ளது.