அமெரிக்காவை சேர்ந்த ரிச்சர்ட் தாலெர், இவ்வாண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை வென்றுள்ளார். நோபல் வென்ற ரிச்சர்ட் தாலெருக்கு வாழ்த்துகள் குவிகின்றன.
அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழக பேராசிரியர் ரிச்சர்டு தாலெர். இவர் இந்த ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை தட்டிச் சென்றுள்ளார். பொருளாதாரத்தின் உளவியல் குறித்த தாலெரின் புரிதலுக்காகவும், பொருளாதாரத்தில் அவரது சிறந்த பணிக்காகவும் இந்த பரிசு வழங்கப்பட்டது.
நோபல் விருது தேர்வுக் குழுவில் ஒருவரான பெர் ஸ்ட்ரோம்பெர்க், ‘பேராசிரியர் ரிச்சர்ட்டின் பணிகள், மனித உளவியல் நடவடிக்கைகள் எவ்வாறு பொருளாதார முடிவுகள் உருப்பெறக் காரணமாக அமைந்தன என்பது குறித்து ஆராய்ந்தது. ரிச்சர்டின் கண்டுப்பிடிப்புகள், பல ஆய்வாளர்களை அவரைப் பின்பற்றி செயல்பட வைத்தது. பொருளாதாரத்தில், மனிதர்களின் பகுத்தறிவு நடத்தை பொருளாதாரம் என்ற புதிய துறை உருவாக அவரது ஆய்வுகள்தான் வழிவகுத்தன’ என்றார்.
மனிதனின் குணாதிசயங்கள் தனிமனித முடிவுகளையும், சந்தை விளைவுகளையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதை தாலெரின் பணிநிலை காட்டுவதாக சுவீடிஷ் அறிவியல் அகாடமி கூறியுள்ளது.
சிகாகோவில் பூத் வணிகப் பள்ளியைச் சேர்ந்த பேராசிரியர் ரிச்சர்ட், ‘நட்ஜ்’ புத்தகத்தின் இணையாசிரியர் ஆவார். மக்கள் பகுத்தறிவற்ற விஷயங்களை எப்படி தேர்வு செய்கிறார்கள்? என்பது குறித்து அந்த புத்தகம் விவரித்தது. ரிச்சர்ட் விவரித்துள்ள ‘நட்ஜிங்’, ‘மக்கள் எப்படி சுயகட்டுபாடுடன் இருக்க வேண்டும் என்பதற்கு உதவும்’ என்று விருது குழுவினர் கூறினார்கள்.
முன்னதாக பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற வாய்ப்புள்ளவர்கள் என ‘கிளாரிவேட் அனாலிடிக்ஸ்’ அமைப்பு வெளியிட்டு இருந்த பட்டியலில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனின் பெயரும் இருந்தது. ஆனால் அவருக்கு கிடைக்கவில்லை.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்திய அரசு உயர் மதிப்புடைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவித்தது. மத்திய அரசின் ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையில் 99 சதவித நோட்டுக்கள் திரும்பிவிட்டது என ஆர்.பி.ஐ. தெரிவித்து உள்ளது. இந்திய அரசின் இந்த அறிவிப்பை முந்தைய ஆண்டுகளில் நோபல் பரிசு வென்றவர்கள் உள்பட உலகம் முழுவதும் உள்ள பொருளாதார வல்லூநர்கள் எதிர்த்தனர். உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுக்கள் ஒழிப்பு நடவடிக்கையில் ரகுராம் ராஜன் கருத்துக்கு எதிர் கருத்து கொண்டிருந்த ரிச்சர்டு தாலெர் பரிசை பெறுகிறார்.
இந்திய அரசின் உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுக்களை ஒழிக்கும் நடவடிக்கையை ரிச்சர்டு தாலெர் ஆதரித்தாலும் 2000 ரூபாய் நோட்டு வெளியீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இந்திய அரசின் ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கை குறித்து டுவிட்டரில், ‘நான் நீண்ட நாட்களாக ஆதரவு தெரிவித்த கொள்கை இது. பணமில்லா வர்த்தகத்தை நோக்கிய முதல்நகர்வு. ஊழலை ஒழிப்பதில் சரியான தொடக்கம்!’ என குறிப்பிட்டார் அவர்.
நோபல் வென்ற ரிச்சர்ட் தாலெருக்கு வாழ்த்துகள் குவிகின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.