வங்காள தேசம் முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடு. குழந்தை திருமணம் அதிகளவில் நடக்கின்றது. 15 வயதுக்கும் குறைவான பெண்களை அவர்களது பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். ஒன்று அந்நாட்டில் பெண்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ள வேண்டும். இல்லையென்றால், ஏதாவது வேலைக்கு சென்று வீட்டிற்கு ஏதேனும் ஒருவகையில் வருமானம் ஈட்ட வேண்டும்.
வங்காள தேசத்தின் காக்ஸ் பஜார் பகுதியில் அமைந்துள்ள கடற்கரை உலகின் மிக நீளமான கடற்கரைகளுள் ஒன்றாகும். அங்கு சிறுமிகள் பலர் முட்டைகள், சிப்ஸ் விற்பனை செய்வர். பல சிறுமிகளை அவ்வாறு நீங்கள் காணலாம், ஆனால், அதற்கு நீங்கள் ஐந்து வருடங்களுக்கு முன்பு அங்கு சென்றிருக்க வேண்டும். இப்போது சென்றால் அந்த சிறுமிகள் மகிழ்ச்சியாக அந்த கடற்கரையில் தொழில்முறை சர்ஃபிங் வீராங்கனை போல ‘சர்ஃபிங்’ செய்வர்.
ரஷீத் ஆலம் என்பவர் தொழில் முறை சர்ஃபிங் வீரர். அவர் ஒருமுறை அந்த கடற்கரைக்கு சென்றபோது, சிறுமிகள் முட்டைகள் விற்பதை பார்த்தார். ஆனால், அவர்களுக்கு மற்றவர்களைப் போல் சர்ஃபிங் விளையாட வேண்டும் என்பது அவர்களுடைய கனவு என்பது இவருக்கு தெரியவருகிறது. அதனால், அவர்களுக்கு சர்ஃபிங் கற்றுத்தர ஆலம் முயற்சி செய்தார்.
ஆனால், தங்கள் மகள்கள் எல்லோர் முன்பும் கடற்கரையில் ஏராளமானோர் பார்க்க சர்ஃபிங் விளையாடுவதை அவர்களின் பெற்றோர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒவ்வொருவர் வீட்டுக்கும் சென்று ஆலன் பெற்றோர்களிடம், தங்கள் மகள்களை சர்ஃபிங் கற்றுக்கொள்ள அனுமதிக்குமாறு சமாதானம் செய்தார்.
சோப், சர்ஃபிங் செய்ய வேண்டும் என ஆசைப்படும் சிறுமி. சிறுமிக்கு 5 சகோதரிகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. சோப் கடற்கரைக்கு சென்று முட்டைகள் விற்றால் தான் வீட்டில் உணவு. அவருடைய அம்மாவால் சம்பாதிக்க முடியாது. ஆனால், சர்ஃபிங் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தை கைவிடாமல் சோப் அதனைக் கற்றுக்கொண்டார். அதன்பின், சர்ஃபிங் தி நேஷன் என்ற போட்டியில் வென்ற சோப், தனக்கு பரிசாக அளித்த சர்ஃபிங் படகு மற்றும் பணத்தொகையை தன்னைப் போன்று உள்ள மற்ற சிறுமிகளுக்கு உதவும் என்பதற்காக ஆலனிடமே தந்துவிட்டார். நான்கு மாதங்களில் அச்சிறுமி சம்பாதிக்கும் தொகைதான் அந்த பரிசுத்தொகை என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது சோப்-ன் அம்மா தன் மகளுக்கு குழந்தை திருமணம் செய்துவைக்க தயாராக இல்லை.
ஆலனின் மனைவி அச்சிறுமிகளுக்கு ஆங்கிலம் கற்றுத் தந்தார். மிகப்பெரும் உயரங்களை அடைந்து சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணத்தை ‘சர்ஃபிங்’ விளையாட்டு அச்சிறுமிகளுக்குத் தருகிறது என்பதுதான் உண்மை.
இதனையும் படியுங்கள்: குழந்தை திருமணத்தில் இந்தியா முதலிடம்: கலங்கடிக்கும் ஆய்வறிக்கை