நியூயார்க் நகரில் நடந்து வரும் ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் அப்பாஸி கடந்த வியாழக்கிழமை உரையாற்றுகையில் இந்தியா மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாகவும், பயங்கரவாதத்துக்கு ஊக்கமளிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
பாகிஸ்தானின் இந்த குற்றச்சாட்டுக்களுக்கு நேற்று ஐ.நா.சபையில் பேசிய இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் சரியான பதிலடியை கொடுத்தார். பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலையாக பாகிஸ்தான் செயல்பட்டு வருகிறது, பயங்கரவாத பூமியாக இருப்பது பற்றி பாகிஸ்தான் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் பதிலடி கொடுத்தார். சுஷ்மா பேச்சுக்கு சபையிலே பலரால் பாராட்டப்பட்டது.
சுஷ்மா சுவராஜின் பதிலடி உரைக்கு பதிலளித்து பேசிய ஐ.நா.விற்கான பாகிஸ்தான் நாட்டு தூதர் மலீஹா லோதி, 'இந்தியா தெற்காசியாவில் பயங்கரவாதத்தின் தாயகம்' என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில் ‘இதுதான் இந்திய ஜனநாயகத்தின் முகம்!’ என இரத்தக் காயத்துடன் உள்ள பெண்ணின் புகைப்படம் ஒன்றை ஐ.நா.வில் அனைவரது முன்பும் உயர்த்திக் காட்டினார்.
ஆனால், புகைப்படத்தில் இடம்பெற்று இருந்த பெண் காஷ்மீரை சேர்ந்தவர் கிடையாது. பெல்லட் துப்பாக்கி சூட்டால் காயப்பட்ட பெண் கிடையாது. காயம் அடைந்த பெண் 17 வயதான ராவ்யா அபு ஜோம் ஆவார். காசாவில் 2014-ம் ஆண்டு இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் காயம் அடைந்தவர். இந்த புகைப்படமானது புகைப்பட கலைஞர் லெவின் என்பவரால் எடுக்கப்பட்டது. மல்லிகா லோகி இந்த புகைப்படத்தை காட்டி காஷ்மீரில் நடந்தது என கூறியது தவறு என்பது தெளிவாகியுள்ளது.
புகைப்படம் காஷ்மீரில் எடுக்கப்பட்டது கிடையாது என கடுமையான விமர்சனங்களுடன் சமூக தளங்களில் இச்செய்தி பரவி வருகிறது. டுவிட்டரில் மலீஹா லோதியை டேக் செய்து விமர்சனங்களும், எதிர்ப்புகளும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. பாகிஸ்தானின் அனைத்து அரசு சமூக வலைதள பகுதிகளிலும், மலீஹா லோதி புகைப்படத்துடன் பேசிய காட்சிகள், ‘காஷ்மீரில் எடுக்கப்பட்ட காட்சி’ என குறிப்பிட்டு தகவல் பகிரப்பட்டது. காஷ்மீரில் புர்கான் வானி கொல்லப்பட்டதற்கு இரு வருடங்களுக்கு முன்னதாக காசாவில் நடைபெற்ற சம்பவத்தின் புகைப்படத்தை காட்டி உலக அரங்கில் பொய் உரைத்து உள்ளது பாகிஸ்தான்.
பாகிஸ்தானின் தூதர் மலீஹா லோதி முன்னாள் பத்திரிக்கையாளர் என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையை ஆய்வு செய்யாமல், உலக அரங்கில் புகைப்படத்தை காட்டி அவர் விமர்சனங்களுக்கு உள்ளாகி உள்ளார்.
இதன்மூலம், பாகிஸ்தானின் நம்பகத் தன்மையும் கேள்விக்குறியாகியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.