பாக்., புதிய பிரதமர் இன்று பிற்பகலில் தேர்வு

பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமர் இன்று பிற்பகலில் தேர்வு செய்யப்படவுள்ளார். அதற்காக, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமர் இன்று பிற்பகலில் தேர்வு செய்யப்படவுள்ளார். அதற்காக, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

கணக்கில் காட்டப்படாத கோடிக்கணக்கான சொத்துக்களை உலகம் முழுவதும் அரசியல் முக்கியஸ்தர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என பிரபலங்கள் பலர், பனாமா நாட்டில் பதுக்குவதற்கு, அந்நாட்டின் மொசாக் பொன்சேகா என்ற சட்ட நிறுவனம் உதவியதும் அண்மையில் அம்பலமானது.

இந்த பட்டியலில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், கால்பந்து வீரர் மெஸ்ஸி, எகிப்தின் முன்னாள் அதிபர் ஹொஸ்னி முபாரக், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட சுமார் 3 லட்சத்துக்கும் அதிமான நபர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்த பனாமா பேப்பர்ஸ் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமரிடம் விசாரணை நடத்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், விசாரணை நடத்த சிறப்பு கூட்டு புலனாய்வுக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. இக்குழு முன்னிலையில், பாகிஸ்தான் பிரதமர், அவரது குடும்பத்தினர், அவருக்கு நெருக்கமான அதிகாரிகள் என அனைவரும் ஆஜராகி பதிலளித்தனர்.

சிறப்பு கூட்டு புலனாய்வுக் குழுவினரின் விசாரணை முடிவடைந்ததையடுத்து, இந்த குழுவினர் தங்களது விசாரணை அறிக்கையை அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்தனர். அதன் மீது திர்ப்பளித்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம், நவாஸ் ஷெரீப்பை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அதனைத்தொடர்ந்து, நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷேபாஸ் ஷெரீப் பிரதமராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அவர் தற்போது பஞ்சாப் மாகாண முதல்வராக உள்ளார். ஆனால், பாகிஸ்தான் அரசியலமைப்புப் படி, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தால் மட்டும் தான் பிரதமராக முடியும். எனவே, அதுவரை இடைக்காலப் பிரதமராக, பெட்ரோலியத்துறை அமைச்சர் ஷாகித் ககான் அப்பாசியை, நவாஸ் ஷெரீப்பின் கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (என்-நவாஸ்) தேர்ந்தெடுத்தது. அவர், 45 நாட்கள் இடைக்காலப் பிரதமராகப் பதவி வகிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தனது வேட்பு மனுவை ஷாகித் ககான் அப்பாசி தாக்கல் செய்தார். அந்நாட்டு அரசியலமைப்புச் சட்டப்படி, அதன் மீது வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும். அதற்காக, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அப்பசியை தவிர, இம்ரான் கானின் தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சியை சேர்ந்த ஷேக் ராஷித், மற்றும் வெறி சில கட்சிகளை சேர்ந்தவர்களும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

பெரும்பான்மை பெற 172 வாக்குகள் தேவை. வாக்குப்பதிவு முடிந்ததும், அந்நாட்டின் புதிய பிரதமர் யார் என்பது தெரிந்து விடும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest International News in Tamil by following us on Twitter and Facebook

×Close
×Close