தெற்கு ஆசியாவில் தீவிரவாதத்திற்கு தாய் நாடாக விளங்குவது இந்தியா தான் என பாகிஸ்தான் பதிலுக்கு விமர்சித்துள்ளது. ஐநா-விற்காக பாகிஸ்தான் வெளியுறவு தூதர் மலீஹா லோதி இந்தியாவின் மீது இந்த குற்றச்சாட்டை வைத்துள்ளார். ஐநா- பொதுச்சபை கூட்டத்தில் சனிக்கிழமை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேசும்போது, பாகிஸ்தான் தீவிரவாகிளின் சொர்க பூமியாக திகழ்வதாக குற்றம்சாட்டியிருந்தார். இந்தியா ஐஐடி, ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களை உருவாக்கி வருகிறது. ஆனால், பாகிஸ்தானோ லஷ்கர்-இ.தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதின் உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத இயக்கங்களை உருவாக்கி வருவதாக பாகிஸ்தானை தாக்கி பேசியிருந்தார்.
இந்த நிலையில், தெற்கு ஆசியாவிலேயே தீவிரவாதத்திற்கு தாய் நாடாக இந்தியா தான் விளங்குகிறது என ஐநா-விற்கான வெளியுறவுத் தூதர் மலீஹா லோதி தெரிவித்துள்ளார். இந்தியா-பாகிஸ்தான் நாடுகளிடையே உள்ள அபாயகரமான பிளவை, உலக நாடுகள் தடுத்து நிறுத்த நினைத்தால் ஆத்திரமூட்டும் வகையில் நடந்து கொள்ளும் இந்தியாவின் நடவடிக்கையை தடுக்க வேண்டும். பாகிஸ்தான் மட்டுமல்லாமல் அண்டை நாடுகளில் தீவிரவாதிகள் செயல்படுவதற்கு இந்தியா உதவி வருவதை நிறுத்த வேண்டும். மேலும், இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து வரும் மோதல்களை தடுத்து நிறுத்த வேண்டும். இந்தியாவுடன் உள்ள காஷ்மீர் பிரச்சனை உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண பாகிஸ்தான் தயாராகவே இருக்கிறது என்று தெரிவித்தார்.