பனாமா பேப்பர் லீக் வழக்கு: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தகுதி நீக்கம்!

பனாமா பேப்பர் லீக் வழக்கில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அப்பதவியில் இருந்து இன்று தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பனாமா நாட்டில் உள்ள புகழ்பெற்ற, ‘மொசாக் பொன்சேகா’ சட்ட நிறுவனத்தின் உதவியுடன், பல்வேறு நாடுகளின் முக்கிய பிரமுகர்கள், வெளிநாடுகளில் சட்ட விரோதமாக முதலீடு செய்துள்ளனர். இதுதொடர்பான ஆவணங்கள், பனாமா பேப்பர்ஸ் என்ற பெயரில் கடந்த ஆண்டு வெளியானது. அந்த பட்டியலில் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தாரின் பெயரும் இடம் பெற்றிருந்ததால் சிறப்பு கூட்டு புலனாய்வு குழு விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

இதுதொடர்பாக, பாகிஸ்தான் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.ஐ.ஏ.யின் கூடுதல் தலைமை இயக்குனர் வாஜித் ஜியா தலைமையில் 6 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டு புலனாய்வுக்குழு அறிக்கை தாக்கல் செய்தது.

இந்த வழக்கை அந்நாட்டின் உச்சநீதிமன்றம் இன்று விசாரித்தது. அதில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால்,  பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் பதவியில் இருந்து நவாஸ் ஷெரீப்பை தகுதி நீக்கம் செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணையை லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் நடத்தும் எனவும் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

×Close
×Close