/tamil-ie/media/media_files/uploads/2017/07/Nawaz-sharif.jpg)
பனாமா பேப்பர்ஸ் விவகாரம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிடம் விசாரணை நடத்த அமைக்கப்பட்ட குழுவினர், தங்களது அறிக்கையை அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யவுள்ளனர்.
உலகம் முழுவதும் அரசியல் முக்கியஸ்தர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என பிரபலங்கள் பலர் தங்கள் கணக்கில் வராத சொத்துக்களை பனாமா நாட்டில் எவ்வளவு பதுக்கி வைத்திருக்கிறார்கள், எப்படி எல்லாம் வரி ஏய்ப்பு செய்துள்ளார்கள் என்ற தகவல் கசிந்து சர்ச்சையை கிளப்பியது. புலனாய்வு பத்திரிகையாளர்கள் சர்வதேச கூட்டமைப்பு (International Consortium of Investigative Journalism) இந்த தகவலை வெளியிட்டது.
கணக்கில் காட்டப்படாத கோடிக்கணக்கான சொத்துக்களை பிரபலங்கள் பனாமா நாட்டில் பதுக்குவதற்கு, அந்நாட்டின் மொசாக் பொன்சேகா என்ற சட்ட நிறுவனம் உதவியதும் அம்பலமானது.
இந்த பட்டியலில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், கால்பந்து வீரர் மெஸ்ஸி, எகிப்தின் முன்னாள் அதிபர் ஹொஸ்னி முபாரக், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட சுமார் 3 லட்சத்துக்கும் அதிமான நபர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்த பனாமா பேப்பர்ஸ் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமரிடம் விசாரணை நடத்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், விசாரணை நடத்த சிறப்பு கூட்டு புலனாய்வுக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. இக்குழு முன்னிலையில், பாகிஸ்தான் பிரதமர், அவரது குடும்பத்தினர், அவருக்கு நெருக்கமான அதிகாரிகள் என அனைவரும் ஆஜராகி பதிலளித்தனர்.
இந்நிலையில், இந்த குழுவினர் தங்களது விசாரணை அறிக்கையை அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யவுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.