துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசப்பட்ட பெண்ணின் காதலரை நியூயார்க் நகர போலீசார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவின் நியூஜெர்சியை சேர்ந்த பெண் ஜெனிஃபர் லண்டனோ (31). இவர், கடந்த மாதம் 25-ம் தேதி காணாமல் போனதாக கூறப்படுகிறது. இரு நாட்களுக்கு பின்னர், நியூயார்க்கின் ப்ரூக்ளின் ஆற்றில் பெண் ஒருவரின் தலை துண்டிக்கப்பட்ட அழுகிய உடல் மிதந்து வந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், அப்பெண் யாரென்று கண்டுபிக்க முடியாமல் குழம்பி வந்தனர். தொடர்ந்து, அப்பெண்ணின் இடுப்பு பகுதியில் வரையப்பட்டிருந்த டாட்டூவை போலீசார் வெளியிட்டனர்.
டாட்டூ புகைப்படத்தை கண்ட ஜெனிஃபர் லண்டனோவின் தாயார் இதேபோன்று தனது மகளும் டாட்டூ வரைந்திருப்பார் என போலீசாரிடம் தகவல் அளித்துள்ளார். "உயிரிழந்த அத்தையின் நினைவாக அவரது பெயரை சமஸ்கிருதத்தில் டாட்டூவாக எனது மகள் வரைந்திருந்தார்" என ஜெனிஃபரின் தாயார் தகவல் அளித்திருந்தார்.
அடுத்த சில நாட்களில் ஹட்சன் ஆற்றில் பெண் ஒருவரின் துண்டிக்கப்பட்ட "கால்" மிதந்து வந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த பெண் ஒருவர், போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். தகவலறிந்து அங்கு வந்த போலீசார் மிதந்து வந்த காலை மீட்டனர். ஆனால், அந்த கால் அழுகிய நிலையில் இருந்ததாக தெரியவில்லை என குறிப்பிட்ட போலீசார், ஏற்கனவே மீட்கப்பட்ட உடலும், இந்த காலும் ஒரே நபருடையது தானா என்பதை கண்டறிய டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
முன்னதாக அழுகிய நிலையில் மீட்கப்பட்ட உடலை பார்த்த சாட்சி ஒருவர் கூறுகையில், அப்பெண்ணின் உடல் வேண்டுமென்றே சிதைக்கப்பட்டது போன்று இருந்தது என குறிப்பிட்டுள்ளார்.
துண்டுதுண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட ஜெனிஃபர் லண்டனோவின் ஏனைய உடல் பாகங்களை தேடும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, ஜெனிஃபரின் காதலர் ரஃபேல் லோலோஸ் என்பவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது கொலை, சடலத்தை சேதப்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெனிஃபர் காணாமல் போனதிலிருந்து அவரது கிரெடிட் கார்டை ரஃபேல் பயன்படுத்தி வந்துள்ளார். மேலும், அவரது வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்ட போது, குளியலறையில் ஜெனிஃபரின் ரத்தக் கறை படிந்துள்ளதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
கைது செய்ததில் இருந்து உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள ரஃபேல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை முடிந்ததும் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்படுவார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.