நியூயார்க்கில் செயல்பட்டு வரும் நியூஸ் 4 செய்தி தொலைக்காட்சியின் பெண் தொகுப்பாளர் ஒருவர் கர்ப்பமாக இருந்த நிலையில், அவர் நேரலையில் செய்தி வழங்கிக் கொண்டிருக்கும்போதே பனிக்குடம் உடைந்துவிட்டது. எனினும், அத்தருணத்தால் தன்னுடைய வேலையை பாதியில் நிறுத்தாத செய்தி தொகுப்பாளர், தன் பணியை முடித்தபின்பே அங்கிருந்து மருத்துவமனைக்கு சென்று குழந்தை பெற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பிரசவம் என்பது பெண்களுக்கு மறுபிறவி என்று கூறுவார்கள். பிரசவம் நெருங்கும் தருவாயில் பெண்கள் பெரும்பாலும் ஓய்வு நிலையிலேயே இருப்பதையே விரும்புவார்கள். ஆனால், தற்போது பெண்கள் பலரும் வேலைக்கு செல்வதால் குழந்தை பிறப்பு வரையும் வேலைக்கு சென்று தன் தொழி நேர்மையை உணர்த்துவார்கள். சமீபத்தில், அமெரிக்காவில் பிரசவ நேரத்திற்கு கடைசி நிமிடம் வரை பணியில் ஈடுபட்டிருந்த மருத்துவர் ஒருவர், மருத்துவமனையில் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த மருத்துவர் ஒருவர் அப்பெண்ணுக்கு பிரசவம் பார்த்த பின்னர், அவர் பிரசவ அறைக்கு சென்று குழந்தை பெற்றெடுத்த சம்பவம் நடைபெற்றது.
அதேபோல், தற்போது நியூயார்க்கில் செயல்பட்டு வரும் நியூஸ் 4 தொலைக்காட்சியின் செய்தி தொகுப்பாளர் நடாலியா (Natalie Pasquarella) நிறைமாத கர்ப்பிணியாக கடைசி நிமிடம் வரை பணிக்கு வந்துள்ளார். அப்போது, நேரலையில் மற்ற சிலருடன் சேர்ந்து குறிப்பிட்ட செய்தி தொகுப்பை வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது செய்தியை சிரித்து வழங்கிக் கொண்டிருந்தபோது, அவருக்கு பனிக்குடம் உடைந்திருக்கிறது.
இதையறிந்த நடாலியா, அதனை பொருட்படுத்தாமல் நேரலையில் அச்செய்தியை கடைசி வரை முழுமையாக முடித்துவிட்டு மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
இந்த செய்தியை அந்நேரலையில் இருந்த மற்றொருவர் தொலைக்காட்சியில் பகிர்ந்துகொண்டார். பிரசவத்தை பொருட்படுத்தாமல் தனது கடமையை சரிவர முழுமையாக மேற்கொண்ட நடாலியாவை பலரும் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.