எல்லா தொழிலும் உன்னதமானது, அந்த தொழிலை மேற்கொள்பவர்களுக்கு மட்டுமே. ஆனால், மருத்துவ தொழில் அனைவருக்கும் உன்னதமான ஒன்று. நம்மை எல்லோரும் கைவிட்டபோது கூட நாம் முழுமையாக நம்பிபோய் நிற்பது மருத்துவர்கள் முன்புதான். அவர்களிடம் அனைத்து ரகசியங்களையும் நாம் சொல்கிறோம். நமது நம்பிக்கைக்குரியவர்கள் மருத்துவர்கள். மருத்துவரே வலியில் இருக்கும்போது மற்றவர்களுக்கு சிகிச்சை அளித்த நிகழ்வுகள் கூட நடந்திருக்கலாம். ஆனால், அமெரிக்காவில் மருத்துவர் ஒருவர் தன்னுடைய பிரசவத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு, பிரசவ வலியில் துடித்த மற்றொரு பெண்ணுக்கு பிரசவம் பார்த்திருக்கிறார். அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தவுடன் தான் குழந்தை பெற்றிருக்கிறார்.
மருத்துவர் அமாண்டா ஹெஸ், அமெரிக்காவில் உள்ள கெண்டக்கி மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக பணியாற்றி வருகிறார். அவர் கர்ப்பமாக இருந்த நிலையில், அவருக்கு பிரசவம் ஆவதற்கு சில மணிநேரங்களே இருந்தன. அதற்காக, மருத்துவமனையில் பிரசவத்திற்கான உடையை அணிந்துகொண்டு தயாராகிக் கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு மற்றொரு வார்டில் இருந்து மற்றொரு பெண் பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்த சத்தம் கேட்டது. உடனேயே மருத்துவர் அமாண்டா ஹெஸ், அந்த வார்டுக்கு சென்றார். மருத்துவருக்கே குழந்தை பிறக்கும் தருவாயில் இருக்க அவர் மற்றொரு பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார். அந்நேரத்தில் வர வேண்டிய மருத்துவர் அங்கு வருவதற்கு கால தாமதமானதால் அவரே பிரசவம் பார்த்தார். அந்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது.
அதன்பிறகே, மருத்துவர் அமாண்டா ஹெஸ் தன்னுடைய இரண்டாவது குழந்தையை பிரசவித்தார். அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
”நான் என்னுடைய பிரசவத்தின் கடைசி நாள் வரை பணியில் இருக்க வேண்டும் என எண்ணினேன். அதனால்தான், பிரசவத்திற்காக ஒருநாள் விடுப்பு மட்டுமே எடுத்தேன். ஆனால், நான் என் பிரசவத்தின் கடைசி மணித்துளிகள் வரை பணியில் இருந்திருக்கிறேன்.”, என அமாண்டா நெகிழ்ந்து கூறுகிறார். இந்த முழு சம்பவத்தையும் சக மருத்துவர் ஹாலா என்பவர் தன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
சக மனிதர்கள் மீதான அன்பு, அவர்களின் துயரை துடைக்க தனது வலியையும் பொருட்படுத்தாமை, தன் தொழில் மீது கொண்ட நேர்மை ஆகியவைதான் மருத்துவரை தனது பிரசவத்திற்கு கடைசி நேரம் வரை பணியாற்ற வைத்திருக்கிறது.
”ஹேட்ஸ் ஆஃப் டாக்டர் அமாண்டா”.