மியன்மரின் பவுத்தர்களின் தாக்குதல்களிலிருந்தும் அரச அடக்குமுறையிலிருந்தும் தப்பி ரோஹிங்யா இஸ்லாமியர்கள் இந்தியா, வங்காளதேசம், மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு அகதிகளாக செல்கிறார்கள். இதற்கிடையே இந்தியாவில் சட்டவிரோதமாக வசிக்கும் 40,000 ரோஹிங்யா இஸ்லாமியர்களை வெளியேற்றுவது தொடர்பாக இந்தியா, வங்காளதேசம் மற்றும் மியான்மர் அரசுடன் பேச தொடங்கியது. இந்நிலையில் மியான்மரில் மீண்டும் வன்முறை வெடித்ததால் 3 லட்சம் பேர் அகதிகளாக வங்காளதேசம் வந்து உள்ளனர்.
இந்தியாவில் ஜம்மு, ஐதராபாத், அரியானா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், டெல்லியில் உள்ள முகாம்களில் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் அகதிகளாக தங்கி உள்ளனர். ரோஹிங்யா இஸ்லாமியர்களை வெளியேற்றுவது தொடர்பான இந்தியாவின் முடிவை அகதிகள் தரப்பில் எதிர்க்கப்பட்டு உள்ளது, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடங்கி உள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக மத்திய அரசு தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவிக்க கேட்டுக் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, வழக்கு விசாரணையை 11-ம் தேதிக்கு ஒத்திவைத்து உள்ளது.
மத்திய அரசு ரோஹிங்யா இஸ்லாமியர்கள் சட்டவிரோதமாக குடிபெயர்ந்து உள்ளனர் என கூறி அவர்களை வெளியேற்ற உத்தரவிட்டு உள்ளது. தேச பாதுகாப்பை காரணம் காட்டி இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளது. ஐ.நா. சபை அவர்களை அகதியென்றே கூறுகிறது. அவர்கள் (ரோஹிங்யா அகதிகள்) பயங்கரவாத செயல்பாட்டில் ஈடுபட்டதாக எந்தஒரு ஆவணமும் கிடையாது, எல்லைத் தாண்டி எந்தஒரு வன்முறை செயலிலும் ஈடுபட வில்லை என ஐ.நா.சபை கூறுகிறது. ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபையிலும் அவர்கள் (அகதிகள்) எந்தஒரு வன்முறை செயலிலும் ஈடுபடவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஜம்முவில் அகதிகள் முகாமில் தங்கிஉள்ள அகதி யானுஸ் பேசுகையில், “எங்களை மனிதராக பாருங்கள், இஸ்லாமியராக இல்லை. எங்களை பர்மாவிற்கு அனுப்புவதற்கு மாறாக நீங்களே எங்களை கொன்றுவிடலாம். அங்கேயும் நாங்கள் கொல்லப்படதான் போகிறோம்.” என கண்ணீர் மல்க கூறினார். உங்களை போன்றுதான் எங்களுடைய எண்ணமும், உலக நாடுகளும், பர்மாவும் (மியான்மர்) அமைதியை கொண்டுவந்தால் நாங்கள் அங்கு சென்றுவிடுவோம்,” என்றார்.
கடந்த மாதம் 25-ம் தேதியில் இருந்து நேற்றுவரை இரண்டு வார காலத்தில் சுமார் 2 லட்சத்து 70 ஆயிரம் ரோஹிங்கியா முஸ்லீம்கள் வங்கதேசத்திற்குள் நுழைந்துள்ளனர் என ஐ.நா.சபை அறிவித்துள்ளது.
இந்த நிலையில், ரோஹிங்கியா போராளிகள் மியான்மர் மீது நடத்தி வரும் தாக்குதலை ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.