‘The Green School, Green Revolution’:இலங்கை மக்களுக்கு வர்த்தக ரீதியாக இன்னல்கள் பல நிலவி வரும் நிலையில், அங்கு வசிக்கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைப்பது கடினமாகிறது. இதற்கு தீர்வு கொடுக்கும் வகையில், மகிழ்மதி இயக்கத்தின் மூலம், ‘பசுமைப் பள்ளி- பசுமை புரட்சி’ திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது.
தமிழ் திரைப்பட நடிகர் சத்யராஜின் மகளும், பிரபலமான ஊட்டச்சத்து நிபுணரான திவ்யா சத்யராஜூம், ஈழத்துக் காந்தி தந்தை செல்வா பேத்தியும், இலங்கையில் தொண்டாற்றி வரும் பூங்கோதை சந்திரஹாசன் உடன் கைகோர்த்து, பசியால் வாடும் ஈழத்தமிழ்க் குழந்தைகளின் பசி மற்றும் போசாக்கு சவால்களை முறியடிக்க “பசுமைப் பள்ளி – பசுமைச் புரட்சி” என்ற புதுமையான திட்டத்தை இலங்கையில் உள்ள நெடுந்தீவில் தொடங்கியுள்ளார்கள்.

இலங்கையின் தற்போதைய அவல நிலை:
ஐக்கிய நாடுகள் அமைப்பின் அறிக்கைப்படி, 3.4 மில்லியன் இலங்கை மக்களுக்கு உயிர்காக்கும் உதவிகள் தேவைப்படுவதாகவும், மேலும் 28% மக்கள் உணவுத் தட்டுப்பாட்டிற்கு தவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
40% பள்ளிமாணவர்கள் உணவுத் தட்டுப்பாட்டால் பள்ளி செல்வதைத் தொடர முடியாமல் உள்ளதாகவும், இலங்கையின் சில பள்ளிகளில் குழந்தைகள் பசியினால் மயங்கி விழுவதாகவும் கூறப்படுகிறது. மேலும், ஆசிரியர்கள் தினசரி குழந்தைகளுக்கு உணவு எடுத்து வருவதால், அந்த ஒரு வேளை உணவிற்காகக் குழந்தைகள் பள்ளிக்கு வருவதாகவும் மக்கள் தங்களது வேதனையை தெரிவித்துள்ளனர்.

“பசுமைப் பள்ளி – பசுமைச் புரட்சி” திட்டத்தின் நோக்கம்:
இலங்கையில் தொண்டாற்றி வரும் பூங்கோதை சந்திரஹாசன், இந்த திட்டத்தின் நோக்கத்தைப் பற்றி கூறியதாவது: “குழந்தைகள் ஒரு தேசத்தின் சொத்தாகக் கருதப்படுகின்றனர். எனினும் இலங்கையின் தற்போதைய நெருக்கடியின் விளைவாக எமது பிள்ளைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் வளர்கின்றனர்.
ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் இருந்து வந்த குறுஞ்செய்தியின் படி, பள்ளிக் குழந்தைகள் உணவிற்குப் பதிலாக வெள்ளிக்கிழமை முதல் ஞாயிறு வரை வெறும் தேநீர் அருந்தி வருவதால், என்னிடம் உதவி நாடினார்.
“பசுமைப் பள்ளி – பசுமைச் புரட்சி ” திட்டம் உணவை இலவசமாகத் தருவதற்குப் பதிலாக, பள்ளிக் குழந்தைகள் தங்களுக்குத் தேவையான காய்கறிகளைத் தாங்களே பயிர் செய்வதற்கான பயிற்சியும், அதற்குத் தேவையான உபகரணங்களும் இலவசமாக வழங்கப் படுகிறது.
ஊட்டச்சத்து குறைவான அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கினால், அப்பள்ளி முதலில் பசுமைப் பள்ளியாக மாறும். பின்னர் அந்த மழலைகள் மூலம் வீட்டில் உள்ளவர்களும் வீட்டுத்தோட்டத்தின் பயிற்சியை அறிவர். அதன்பின் அந்த வீடு பசுமையாக மாறும் பின்னர் படிப்படியாக அந்தச்சமூகம் பசி, பட்டினி ,பஞ்சம் இன்றி மாறும் என்பதில் ஐயமில்லை”, என்றார்.
இந்த திட்டத்தின் தொடக்கத்திற்கு இலங்கையிலுள்ள நெடுந்தீவை தேர்ந்தெடுத்தமைக்கான காரணம்:
இலங்கையில் வடக்கு மாகாணப் பகுதியில் உள்ள நெடுந்தீவில், ஈழத்தமிழர் வாழ்ந்து வருகின்றனர். அங்கு ஒரு நாளுக்கு இரண்டுமுறை மட்டுமே படகுப் போக்குவரத்துச் சேவை உள்ளது. இப்பொழுதுள்ள பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக, நெடுந்தீவு மக்கள் பல இன்னல்களை அன்றாடம் சந்திக்கின்றனர்.
நெடுந்தீவு பிரதேசசபை அபிவிருத்தி உத்தியோகஸ்தர் தி.வசந்தகுமார், அங்கு வாழும் தமிழ்க் குழந்தைகளின் உணவு மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடுகளை முறியடிக்க SBTCF நிறுவனத்தின் உதவியை நாடினார்.
நெடுந்தீவில் உள்ள குழந்தைகளின் நிலையைப் பற்றி SBTCF தலைமை நிர்வாக அதிகாரி ந.அனுஜன் கூறியதாவது, “SBTCF சார்பாக ஆய்வறிக்கை தயாரிக்க அங்கு சென்றபொழுது, தினமும் எந்த ஒரு காய்கறியும், புரதச்சத்துகள் நிறைந்த உணவும் இல்லாமல், வெறும் சோறு உண்ணும் குழந்தைகளை நான் பார்த்த போது, அந்த வேதனையை என்னால் வார்த்தைகளால் கூற இயலாது.
நான் புகைப்படம் எடுப்பதைப் பார்த்து குழந்தைகள் தங்கள் கண்களைத் துடைத்துக்கொண்டு எனக்குச் சிரித்தபடி காட்சி கொடுத்தனர். அதை பார்த்தபொழுது , என்னை அறியாமல் என் கண்கள் கலங்கியது. இந்தப் பிரச்சனையைச் சமாளிப்பதற்கு “பசுமைப் பள்ளி – பசுமைச் புரட்சி ” திட்டமே உகந்தது என்று, எம் நிறுவனத் தலைவி செல்வி பூங்கோதை தெரிவித்தார்”, என்றார்.
மேலும் இந்த திட்டத்தில் பங்குகொண்ட மகிழ்மதி இயக்கத்தின் நிறுவனர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர், திவ்யா சத்யராஜ் கூறியதாவது, “நெடுந்தீவில் வாழும் ஈழத்தமிழ்க் குழந்தைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்த ‘பசுமைப் பள்ளி – பசுமைச் புரட்சி’ திட்டத்தைப் பற்றி பூங்கோதை அவர்கள் சொன்னபோது, என் சேமிப்பிலிருந்து ஒரு தொகையை காசோலையாக எனது தந்தை சத்யராஜ் அவர்களின் பிறந்தநாள் அன்று கொடுத்தேன்.

வசதியானவர்களுக்கு மட்டும்தான் உணவும் ஊட்டச்சத்தும் என்பது நியாயமாகாது. நெடுந்தீவில் வாழும் என் தமிழ்ப்பிள்ளைகளின் உடலினை உறுதிசெய்ய – அறிவை விரிவாக்க அவர்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவு தேவை. பூங்கோதை அவர்களின் “பசுமைப் பள்ளி – பசுமைச் புரட்சி ”ஒரு அற்புதமான திட்டம். புரட்சித்தமிழன் சத்யராஜ் அவர்களின் மகளாகவும், ஒரு தமிழ் மகளாகவும் என் ஈழத்தமிழர்களின் நலன்காக்க உழைப்பேன்”, என்றார்.
இதன்பின்னர், SBTCF நிறுவனர் பூங்கோதை சந்திரஹாசனும், ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா சத்யராஜூம் கைகோர்த்து, “பசுமைப் பள்ளி – பசுமைச் புரட்சி ”திட்டத்தை கடந்த ஆண்டு, அக்டோபர் 25 ஆம் தேதி நெடுந்தீவில் உள்ள குழந்தை இயேசு பாலர்பள்ளியில், மாதிரி செயற்திட்டமாக வெற்றிகரமாகத் தொடங்கினர்.
திட்டத்தின் செயற்பாடுகளுக்கான அணுகுமுறை:
பாலர் பள்ளியில் பயிலும் குழந்தைகளின் தாய்மார்களுக்கு விவசாயப் பயிற்சி அளிக்கப்பட்டு, வேளாண் துறைத் திணைக்கள விவசாயப் போதனாசிரியரின் அனைத்து உபகரணங்களும் இலவசமாக வழங்கப்பட்டன. பாலர்பள்ளிச் சமயலறைப் புனரமைப்பு செய்யப்பட்டது. சமயலறைக்குத் தேவையான அனைத்து உபகரணங்களும் கொடுக்கப்பட்டன.
பயனாளிகளின் கருத்து:
இந்த திட்டத்தின் மூலம் பயனடையும் குழந்தைகளின் பெற்றோர்கள் மிகவும் பெருமிதம் கொள்கின்றனர். இதில், டிலானி டொனேஷ் (பெற்றோர்) கூறியதாவது, “என் குழந்தைகள் மிகவும் ஆர்வத்துடன் இந்த தோட்டப் பயிர்ச் செய்கையில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கென சில செடிகளைத் தேர்ந்தெடுத்து, மிக அன்புடன் அவற்றைப் பராமரிக்கின்றனர். இதன் மூலம் அவர்களுக்கு இயற்கையின் மீது அன்பும், மதிப்பும் அதிகரிக்கிறது என நான் நம்புகின்றேன்”, என்றார்.

நெடுந்தீவில் பொது சுகாதாரப் பரிசோதகர், ஜெனட் ஜான்சன் கூறியதாவது,“நான் 15 வருடங்களாக இந்தியாவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தோப்புக்கொல்லை முகாமில் அகதியாக இருந்துள்ளேன். நான் 2003 ஆம் ஆண்டு இலங்கைக்குத் திரும்பினேன். நாட்டின் தற்போதைய சூழ்நிலை காரணமாக, நெடுந்தீவைச் சேர்ந்த பெரும்பாலான குடும்பங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருமானம் மிகவும் குறைந்து, சிறுவர்களின் போஷாக்கை நிலைப்படுத்த முடியவில்லை. SBTCF இன் இத்திட்டம் மிகப் பயனுள்ளதாகவும், குழந்தைகளின் உணவு போஷாக்கு பிரச்சனைக்கு நீண்டகாலத் தீர்வாகவும் அமையும் என நம்புகின்றேன்”, என்றார்.
இயேசு பாலர்பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறியதாவது, “அக்டோபர் மாதம் ஆரம்பித்த இத்திட்டத்தின் பலனாக, இப்பொழுது விதைகள் செடிகளாக வளர்ந்து, அச்செடிகள் மூலம் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களை பயன்படுத்தி, பள்ளிக்குழந்தைகளின் தாய்மார் தயாரிக்கும் போசாக்கான மதிய உணவை குழந்தைகள் மகிச்சியோடு உண்ணுகின்றனர்”, என்றார்.
இந்த மாதிரி செயற்திட்டத்தின் தொடர் நடவடிக்கையாக நெடுந்தீவில் மேலும் இரண்டு பாலர் பள்ளிகளிலும் மற்றும் மூன்று அரசு பள்ளிகளிலும் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
“இது எங்கள் முயற்சியின் ஆரம்பமே, நம் தமிழக அரசு, அரசியல் பிரமுகர்கள், அரசியல் ஆர்வலர்கள், திரை துறையினர்கள், உலகெங்கும் வாழும் இந்தியர்கள், ஆகிய அனைவரும் ஈழத்தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கவேண்டும். இத்திட்டம் வெற்றிகரமாக நடைபெறும் பட்சத்தில், எங்களது அடுத்த திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த ஆலோசிக்கிறோம்” என்று திவ்யா சத்யராஜ் கூறுகிறார்.