இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: ஜனவரி 5 பொதுத்தேர்தல்!

உச்சநீதிமன்றத்தின் கருத்தை கேட்காமல் தேர்தலை நடத்த முடியாது

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா அந்நாட்டு நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார்.  இதையடுத்து வரும் ஜனவரி 5ம் தேதி இலங்கையில் பொதுத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு:

கடந்த மாதம் 26 ஆம் தேதி,  ரணில் விக்ரம சிங்கேவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கி  சிறிசேனா உத்தரவிட்டார். இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனாவுக்கும், பிரதமர் ரணில் விக்ரம சிங்கேவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடே இதற்கு காரணம் என்று கூறப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சேவுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. மேலும் இலங்கை நாடாளுமன்றத்தை முடக்கி சிறிசேனா  அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டார்.

இதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்தன. இதன் எதிரொலியாக  அந்த அறிவிப்பு திரும்ப பெறப்பட்டது. அதேசமயம், தான்தான் பிரதமர் என்ற அறிவித்த ரணில், பிரதமருக்கான அலரி மாளிகையில் இருந்தும் வெளியேற மறுத்தார்.

இந்நிலையில், ரணிலை பிரதமராக அங்கீகரித்த அந்நாட்டு சபாநாயகர்  கரு. ஜெயசூரியா, வரும் 14ம் தேதி நாடாளுமன்றம் கூடும் என்றும், அன்றைய தினம், நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்றும் தெரிவித்தர்.இதனால் இலங்கை அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், எம்பிக்கள், அணி மாறுவது, புதிய அமைச்சர்கள் பதவியேற்பு என்ற காட்சிகள் இலங்கை அரசியலில் சர்வசாதாரணமாக மாறியது. ராஜபக்ச தரப்பினர் வெளிப்படையாகவே குதிரைப்பேரத்தில் ஈடுபட்டு வருவதாக ரணில் தரப்பு குற்றம்சாட்டியது.தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் ஆகியவை மகிந்த தரப்புக்கு ஆதரவு அளிக்கப்போவதில்லை என்று அறிவித்திருந்தன.

ஜனவரியில் தேர்தல் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற 113 எம்.பி.க்களின் ஆதரவை பெற வேண்டிய சூழலில், ராஜபக்சவால் போதிய ஆதரவை பெற முடியவில்லை.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தை கலைக்கும் உத்தரவில் நேற்றிரவு அதிபர் மைத்ரி பால சிறிசேன கையெழுத்திட்டார். தொடர்ந்து நாடாளுமன்றத்திற்கு தேர்தல் வரும் ஜனவரி 5ம் தேதி நடைபெறும் என்றும், அதற்கான மனுத்தாக்கல் வரும் 19ம் தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே உச்சநீதிமன்றத்தின் கருத்தை கேட்காமல் தேர்தலை நடத்த முடியாது என இலங்கை தேர்தல் ஆணையர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இலங்கை அரசியலில் இப்படி ஏகப்பட்ட திருப்பங்கள் மாறி மாறி நிகழ  உலக நாடுகள் உட்பட அனைவரின் கவனமும் இலங்கை பக்கம் திரும்பியுள்ளது.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest International news in Tamil.

×Close
×Close