போலீஸ் திருடன்: உணவு இடைவேளையில் வங்கிகளில் கொள்ளை, அதன்பின் விசாரணை அதிகாரி

உணவு இடைவேளைகளில் வங்கிகளில் பெரும் பணத்தை கொள்ளையடித்த பெயர்போன ஆண்ட்ரூ ஸ்டாண்டர் பற்றிய சுவாரஸ்யங்கள் குறித்து உங்களுக்கு தெரியுமா?

By: October 6, 2017, 2:30:35 PM

தென்னாப்பிரிக்காவில் போலீஸாக இருந்துகொண்டே மதிய உணவு இடைவேளைகளில் வங்கிகளில் பெரும் பணத்தை கொள்ளையடித்த பெயர்போன ஆண்ட்ரூ ஸ்டாண்டர் பற்றிய சுவாரஸ்யங்கள் குறித்து உங்களுக்கு தெரியுமா?

தென்னாப்பிரிக்காவில் இனவெறி கோலோச்சிய 1970களில் தான் ஆண்ட்ரூ பெயர்போன கொள்ளையனாக மாறினார். போலீசாக மிகச்சிறிய காலத்திலேயே பதவி உயர்வுகளை பெற்ற ஆண்ட்ரூ, ஏன் கொள்ளையனாக மாறினார் என்பது இன்றளவும் புதிராகத்தான் உள்ளது.

இவருடைய தந்தை ஃப்ரான்ஸ் ஸ்டாண்டர் தென்னாப்பிரிக்க சிறைத்துறையில் மேஜர் ஜெனரலாக பணியாற்றியவர். தென்னாப்பிரிக்காவில் பெரும் மதிப்புக்குரிய பொறுப்பில் வகித்த ஃப்ரான்ஸ் ஸ்டாண்டர் தன் மகன் ஆண்ட்ரூவையும் தன்னைப்போல் உயர் பதவியில் அமர்த்தி அழகு பார்க்க வேண்டும் என எண்ணினார். அதற்காக, தன் மகனை காவல் துறையில் பணியாற்ற வேண்டும் என கட்டாயப்படுத்தினார் ஃப்ரான்ஸ் ஸ்டாண்டர்.

ஆனால், அந்த வேலையிலெல்லாம் நாட்டம் இல்லாத, ஆண்ட்ரூ ஸ்டாண்டர், தன் தந்தையின் கட்டாயப்படுத்துதலால் போலீஸ் ஆனார். மேலும், ஃப்ரான்ஸ் ஸ்டாண்டர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, மகனுக்கு காவல் துறையில் வெகு விரைவிலேயே பல உதவிகளை பெற்றுத்தந்தார். ஆனால், இவை எதிலுமே ஆண்ட்ரூவுக்கு நாட்டமில்லை.

தன் மனைவியை விவாகரத்து செய்தார். வேறொரு பெண்ணுடனான பழக்கத்தில் இவருக்கு குழந்தையும் பிறந்தது.

Andrew Stander, south africa, theft, police ஆண்ட்ரூவின் மனைவி

1970-களின் இறுதியில், ஒருமுறை பணியிலிருந்த ஆண்ட்ரூ, உணவு இடைவேளையின்போது ஜோஹன்னஸ் விமான நிலையத்திலிருந்து டர்பன் சென்றார். அங்கு, தாடி, விக் எல்லாவற்றையும் அணிந்துகொண்டு வங்கி ஒன்றுக்கு சென்று அதன் கணக்காளரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டினார். தன்னுடைய பையில் பணத்தை நிரப்புமாறு கேஷூவலாக கூறினார் ஆண்ட்ரூ. அவரும் ஆண்ட்ரூ சொன்னதைபோலவே செய்தார். கொள்ளையடித்துவிட்டு மீண்டும் தனது போலீஸ் பணியை தொடர்வார்.

இப்படித்தான் ஆரம்பித்தது இவரின் கொள்ளைக் கதை. அதற்கடுத்த 3 வருடங்களில் சுமார் 1,00,000 ராண்ட்-ஐ கொள்ளையடித்தார். 1980-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் டர்பனில் வங்கியொன்றில் கொள்ளையடிக்கும்போது போலீஸில் சிக்கினார் ஆண்ட்ரூ.

அவருக்கு 75 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது அந்நாட்டு நீதிமன்றம். ஆனால், பல வழக்குகளில் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டதால் 17 ஆண்டுகள் அவர் சிறையில் கழிக்க நேரிட்டது.

ஆண்ட்ரூ அடைக்கப்பட்ட சிறை

சிறையிலிருந்தபோது விசாரணையில், தான் போலீஸாக இருந்தபோது தெம்பிசா பகுதியில் நடைபெற்ற போராட்டம் ஒன்றில் கலந்துகொண்டவர்களை சுட நேரிட்டதாகவும், அப்போதே தனக்கு காவல் துறை மீதான நம்பிக்கை பறிபோய்விட்டதாகவும் தெரிவித்தார். மேலும், தான் இனவெறியை வெறுப்பதாகவும் கூறினார். இதனால், பலருக்கும் அவர் மீது அனுதாபம் ஏற்பட்டது.

ஆனால், தெம்பிசா போராட்டத்தின்போது ஆண்ட்ரூ அங்கு இல்லை என சக போலீசார் தெரிவித்தனர்.

சிறையில், ஆலன் ஹெயில் மற்றும் பேட்ரிக் மெக்கால் ஆகிய இரு கைதிகளை நண்பர்களாக்கிக் கொண்டார். ஒருமுறை, பேட்ரிக் மற்றும் ஆண்ட்ரூ தங்களுக்கு உடல்நிலை சரியில்லை என பொய்சொல்லி மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது போலீசாரை ஏமாற்றிவிட்டு இருவரும் மருத்துவரின் காரிலேயே தப்பி சென்றனர். அதன்பின், மீண்டும் சாதுர்யமாக திட்டமிட்டு சிறையிலுள்ள ஆலன் ஹெயிலை வெளியே கொண்டுவந்தனர்.

அவர்கள் மூவரும் ஹௌக்டனில் தலைமறைவாகினார். ஆனால், சிறிது காலத்திலேயே மூவரும் இணைந்து பல கொள்ளை திட்டங்களை செயல்படுத்தினர். அடுத்த இரண்டு மாதங்களிலேயே சுமார் 20 வங்கிகளில் 5,00,000 ராண்ட் பணத்தை கொள்ளையடித்தனர். அவர்கள் மூவரும் ஸ்டாண்டர் கேங் என மக்களால் அன்போடு (?) அழைக்கப்பட்டனர். அவர்கள் வன்முறையில் ஈடுபடாமல், தங்களுக்கு என்ன தேவையோ அதை மட்டும் பெற்றுக்கொண்டு சென்றுவிடுவர். மது, பாலியல் உறவு இரண்டிலும் தங்கள் வாழ்க்கையை அனுபவித்தனர்.

அவர்கள் மிகவும் பிரபலமாகினர். அதுதான் அவர்களுக்கு சோதனையை உண்டாக்கியது. அவர்களது புகைப்படங்கள் நாளிதழில் வெளியாகின. மூவரும் நாட்டைவிட்டு தப்பிச்செல்ல முடிவெடுத்தனர். ஆண்ட்ரூ ஃபுளோரிடா மாகாணத்திற்கு பறந்தார். மற்ற இருவரும் கடல் மார்க்கமாக தப்பித்து செல்ல முடிவெடுத்தனர்.

இவர்கள் மூவருடனும் பழகிய பெண் ஒருவர் காவல் துறைக்கு அவர்கள் குறித்த தகவல்களை அளித்தார். மூவரையும் போலீஸ் கிட்டத்தட்ட நெருங்கியது. மெக்கால் தான் பதுங்கியிருந்த வீட்டைவிட்டு வெளியேற பயந்தார். ஆனால், ஹெயில் தப்பித்தார்.

மெக்கால் இருந்த இடத்தை கண்டுபிடித்து போலீஸ் அங்கு வந்தபோது, மெக்கால் தற்கொலை செய்துகொண்டார்.

மற்ற இருவருக்கும் எதிராக 1984-ஆம் ஆண்டு சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. 1985-ஆம் ஆண்டு பிரிட்டனில் ஹெயில் கைது செய்யப்பட்டார். 2005-ஆம் ஆண்டு அவர் பரோலில் விடுவிக்கப்பட்டார். அப்போது முதல், அவர் தன்னம்பிக்கை பேச்சாளராக மாறினார்.

ஆண்ட்ரூ அமெரிக்காவில் தலைமறைவானார். ஆனால், அவரை அமெரிக்க காவல் துறைக்கும் தெரியும். ஒருமுறை தன்னுடைய சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது போலீசார் அவரை சுற்றி வளைத்தனர். போலீசிடம் சண்டை போட்டார் ஆண்ட்ரூ. இறுதியில் ஆண்ட்ரூ போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

தான் நல்லவன்தான் என மக்களை ஆண்ட்ரூ நம்ப வைத்ததாலேயே இன்றளவும் அவரது பெயரை தென்னாப்பிரிக்க மக்கள் நினைவில் வைத்துள்ளனர். ஆண்ட்ரூ தான் கொள்ளையில் ஈடுபட்டபின் மீண்டும் போலீஸ் பணிக்கு திரும்பியவுடன், தான் கொள்ளையடித்த வழக்குகள் குறித்தே விசாரணையை நடத்துவார். இதுதான் அவரை ஒரு டானாக நிலைநிறுத்தியிருக்கிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the International News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:The unbelievable true story of the cop who robbed banks during his lunch breaks

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X